தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1982 குளங்கள் சீரமைப்பு – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்…

நாகப்பட்டினம்:-

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1982 குளங்கள் சீரமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம், காடந்தேத்தி கிராமம், வெள்ளேரி குளத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் (2019-2020) நீர் மேலாண்மை இயக்கப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு ரூ.49968.80 லட்சம் மதிப்பீட்டில் 1829 பணிகளுக்காண அரசாணையை வெளியிட்டுள்ளார். இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக ரூ.1659.65 லட்சம் மதிப்பீட்டில் 82 பணிகள் செய்து முடிக்க உத்தேசிக்கப்பட்டு, இத்திட்டத்தின் வாயிலாக ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாருதல், பழுதடைந்த கட்டுமானங்களை புதுப்பித்தல் மற்றும் அடைப்பு பலகைகளைப் புதுப்பித்தல் போன்ற சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1982 குளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குளத்திற்கும் பொதுமக்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மீதமுள்ள 90 சதவீதம் அரசு நிதியும் சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே விவசாயப் பெருமக்கள் குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும்.

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் இந்த நேரத்தில் இதற்கென ஒரு சிறப்புத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வழங்கப்பட்டுள்ள 181 பணிகளில் மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்தால் பாதிப்பு இல்லாத பணிகளை கண்டறிந்து அந்த பணிகளை முதலாவதாக எடுத்துக் கொண்டு தண்ணீர் வரும் பட்சத்திலும் தூர்வாரும் பணிகள் தடைபடாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ.தியாகராஜன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.