தற்போதைய செய்திகள்

நாமக்கல் சட்டக்கல்லூரிக்கு தற்காலிகமாக இடம் தேர்வு – அமைச்சர் பி.தங்கமணி ஆய்வு…

நாமக்கல்:-

நாமக்கல் சட்டக்கல்லுரி தற்காலிகமாக செயல்பட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் பி.தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 10.07.2019 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் புதிய சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்றும், இதற்காக ரூ.3 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் புதிய சட்டக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இந்த சட்டக்கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டும் வரை நாமக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டான்சி நிறுவன வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட இருக்கும் டான்சி நிறுவன வளாகத்தை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம், நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர் கிராந்தி குமார் பதி, சட்டக்கல்லூரி முதல்வர் மற்றும் தனிஅலுவலர் முனைவர் ம.ராஜேஸ்வரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வள்ளுவன் உள்பட அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி நாமக்கல் சட்டக்கல்லூரிக்கான இடத்தை தேர்வு செய்வதற்காக வள்ளிபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நாமக்கல் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்காக இடத்தை தேர்வு செய்ய பெரியபட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது அரசு வழக்கறிஞர் தனசேகரன், நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா, வட்டாட்சியர் பச்சைமுத்து உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.