சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கிறது – விக்கிரவாண்டி தொகுதியில் துணை முதலமைச்சர் பேச்சு

விழுப்புரம்:-

தி.மு.க. ஆட்சியில் அராஜகமும், கொலைவெறி தாக்குதலும் தான் தலைவிரித்தாடியது. ஆனால் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியோடு தமிழகத்தில் இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

விக்கிரவாண்டி தொகுதி கழக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து  தொகுதியின் பல்வேறு இடங்களில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் வேட்பாளரும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் உடன் இருந்தனர்.

துணை முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்ற இடங்களில் எல்லாம் வழிநெடுக தொண்டர்கள் கழக கொடியேந்தி வாழ்த்தொலி முழங்க வரவேற்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-

கழக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இன்றைய தினம் தமிழகம் ஒரு முதல்நிலை மாநிலமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து அம்மாவின் திட்டங்களை தொய்வின்றி நிறைவேற்றி வருவதும் தான்.

தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதை, மக்களுக்கு நல்லது செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கழக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை எல்லாம் மூடி மறைத்து விட்டு ஒன்றுமே செய்யவில்லை என்று சென்ற இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கழக ஆட்சி செய்யாத திட்டங்களை இனி வேற யாராலும் செய்ய முடியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு தமிழகத்தில் அற்புதமான பல திட்டங்களை நிறைவேற்றி மக்கள் வளமான வாழ்வு வாழ்வதற்கு வழிவகை செய்திருக்கிறார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு நீங்கள் சென்றாலும் தமிழகத்தை போன்ற ஒரு நல்லாட்சி நடக்கும் மாநிலத்தை பார்க்க முடியாது. அனைத்து துறைகளிலும் தமிழகம் முதல்நிலை மாநிலமாக இருப்பதை போன்று வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது.

நம்மை பார்த்து தான் மற்ற மாநில அரசுகள் எல்லாம் திட்டங்களை செயல்படுத்த தொடங்க முன்வந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்னர் அம்மா அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை இப்போது தான் மற்ற மாநில அரசுகள் புதிதாக அறிவித்துள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தவறான பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

கழக ஆட்சியை கவிழ்த்து விட்டு எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும், முதலமைச்சராகி விடவேண்டும் என்று கனவு காண்கிறார். அவரது கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. ஏனென்றால் தி.மு.கவினர் செய்த அக்கிரமங்களும், அநியாயங்களும், அடாவடித்தனங்களும், அராஜக செயல்களும் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எப்படியெல்லாம் சீர்குலைந்தது, எப்படியெல்லாம் அராஜகம் தலைவிரித்தாடியது. அப்பாவி மக்களின் நிலங்களை எல்லாம் அவர்கள் அபகரித்து கொள்ளையடித்தார்கள்.

கந்துவட்டி கொடுமை தி.மு.க. ஆட்சியில் எப்படி இருந்தது. தங்கள் குடும்ப நலனுக்காக மூன்று பத்திரிகை ஊழியர்களை உயிரோடு எரித்துக் கொன்ற கொடுமை வேறு எந்த ஆட்சியிலும் நடந்ததா? நடைபயணம் மேற்கொண்ட அவர்கள் கட்சி அமைச்சரே படுகொலை செய்யப்பட்டாரே இதெல்லாம் மக்களுக்கு தெரியாமல் போய் விடுமா? அல்லது மக்களுக்கு மறதி அதிகம் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறாரா?

தி.மு.க. ஆட்சியில் எப்படியெல்லாம் மக்கள் துன்பத்திற்கு ஆளானார்கள். மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டார்கள். தமிழகம் எப்படி இருளில் மூழ்கியிருந்தது என்பது மக்களுக்கு தெரியாதா? மணிக்கணக்கில் மின்வெட்டு இருந்தபோது மக்கள் பட்ட துன்பம் இன்னும் அவர்களால் மறக்க முடியவில்லை. புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்த பின்னர் தானே எல்லாமே சீர்செய்யப்பட்டு சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு, மின்சார தட்டுப்பாடு நீங்கி, மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டது. இப்பொழுது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதானே நடந்து கொண்டிருக்கிறது.

சட்டம், ஒழுங்கு சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு சட்டத்தை பாதுகாத்து வருகிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருந்தது.இப்போது அப்படி இல்லையே. பெண்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று இந்திய திருநாடே புகழ்கிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதனால் தான் சீன அதிபரும், பிரதமரும் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் இருவரும் தமிழகம் வந்தபோது ஒரு சிறு அசம்பாவிதமும் நடந்தது உண்டா? அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பது நிரூபணமாகி இருக்கிறது.எனவே இந்த ஆட்சி எதிர்காலத்திலும் தொடர்ந்து நீடிக்க இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.