சிறப்பு செய்திகள்

அம்மாவின் ஆத்மா தி.மு.க.வினரை சும்மா விடாது – முதலமைச்சர் ஆவேச பேச்சு

திருநெல்வேலி

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னர் முதலமைச்சருக்கு வழிநெடுக மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். பல்வேறு இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், குலவை ஒலி எழுப்பியும் உற்சாகமாக வரவேற்றனர். கழகத்தினர் சுமார் ஒரு கிலோ மீட்டர்தூரத்துக்கு சாலையின் இரு புறங்களிலும் திரண்டு நின்று கழகத்தின் கொடியேந்தி முதலமைச்சரை வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பாளையங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியதாவது:-

இந்த தேர்தலில் காங்கிரசும், தி.மு.க.வும் வெற்றி பெற்று விட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கற்பனையான ஒரு கனவு கண்டு அதை பிரச்சாரம் செய்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். இந்த ஆட்சி ஒரு இரும்பு எஃகு கோட்டையாக உள்ளது. எந்த கொம்பனாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. கலைக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் ஒன்றும் 2006-ல் காங்கிரசின் அடிமையாக இருந்து கொண்டு மைனாரிட்டி ஆட்சி நடத்தவில்லை. 122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு தான் நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனக்கு மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. மெஜாரிட்டி ஆட்சி நடக்கிறது. இதை ஸ்டாலின் கவிழ்க்க நினைக்கும் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

ஆளுநரிடம் சிலர் மனு கொடுத்தபோது மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு சபாநாயகர் எனக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சட்டப்பேரவை கூடியதும் அங்கு என்னென்ன அராஜகங்களை தி.மு.க.வினர் கட்டவிழ்த்து விட்டனர் என்பதை மக்களாகிய நீங்கள் நன்றாக அறிவீர்கள். இந்த அரசின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்ற தீர்மான வாசகத்தை நான் படித்த முடித்த உடனேயே ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க.வினர் எழுந்து சட்டப்பேரவையில் அராஜகத்தில் ஈடுபட்டனர். மைக்குகளை பிடுங்கி வீசினார்கள்.

பேப்பர் வெயிட்டுகளை தூக்கி எறிந்தார்கள். சபாநாயகரை பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து சென்றவுடன் அவரது நாற்காலியில் போய் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உட்கார்ந்து கொண்டு சீட்டை கிழித்தார்கள். நடனமாடினார்கள். தங்கள் இருக்கையின் மீது எழுந்து நின்று குதித்தார்கள். இப்படியெல்லாம் அராஜகம் செய்து விட்டு வெளியே வந்த ஸ்டாலின் தனது சட்டையை கிழித்து விட்டதாக செய்தியாளர்களிடம் ஒரு அப்பட்டமான பொய்யை அரங்கேற்றினார்.

அவரது சட்டை சலவை குலையாமல் அப்படியே இருந்தது. ஆனால் அவரே சட்டையை கிழித்துக் கொண்டு, சட்டையை பேரவைக்குள் கிழித்து விட்டார்கள் என்று வெளியே போய் சொன்னது எவ்வளவு பெரிய மோசடியான குற்றச்சாட்டு என்பதை நேரில் பார்த்த செய்தியாளர்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்.

எதிர்க்கட்சியில் இருந்தபோதே இதுபோன்ற அராஜகத்தில் இருப்பவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், வரப்போவதில்லை என்பது ஒரு புறம் உண்மை என்றாலும் கூட ஆட்சிக்கு வரப்போவதாக கனவு கண்டு கொண்டிருக்கிறாரே ஸ்டாலின், அவருக்கு சொல்கிறேன். அப்படி ஒரு துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டால் இந்த நாடு என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதனால் தான் தி.மு.க.வை ஒரு போதும் ஆட்சியில் உட்கார வைக்க மாட்டோம் என்று மக்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். எந்த காலத்திலும் ஸ்டாலினால் முதலமைச்சராகவும் முடியாது. அவரது கட்சி ஆட்சிக்கும் வர முடியாது. ஏனென்றால் அம்மாவின் ஆத்மா அவர்களை சும்மா விடாது. அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களே அவர்கள் தான். இதில் சிதம்பரமும் ஒரு காரணம். அவர் இப்போது என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அவரை அம்மாவின் ஆத்மா என்ன பாடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி இரண்டு ஆண்டுகாலம் உடல்நலம் குன்றியிருந்தபோது அவரை யாராவது பார்க்க முடிந்ததா? அவரை வீட்டுக் காவலில் தானே வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட கட்சியை சேர்ந்த ஸ்டாலின் புரட்சித்தலைவி அம்மாவின் மரணத்தை பற்றி நம் மீது பழிபோட்டு வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அம்மாவின் மரணத்துக்கு மறைந்த கருணாநிதியும், ஸ்டாலினும் தான் காரணம் என்பதை பகிரங்கமாக குற்றம் சாட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

அவர்கள் கொடுத்த மன உளைச்சல், அவர்கள் தொடர்ந்த வழக்கு இவை தானே அம்மாவின் மரணத்துக்கு காரணம். அப்படிப்பட்டவர்களை அம்மாவின் ஆத்மா சும்மா விட்டு விடுமா? அம்மாவுக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை எல்லாம் அம்மாவின் ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது. சும்மா விடாது. அம்மாவின் ஆத்மா எங்களை எப்பொழுதும் ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கிறது.

சட்டமன்றத்தில் பேசும்போது அம்மா அவர்கள் சொன்னார்களே, எனக்கு பின்னாளும் இந்த ஆட்சி 100 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என்று. அந்த வாக்கு தெய்வ வாக்கு ஆகும். அம்மா அவர்கள் மறைந்தாலும் அவரது வாக்கின்படி இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். அதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். ஏனென்றால் அம்மாவின் ஆத்மா கழகத்தையும், கழக ஆட்சியையும், கழகத்தினரையும் தெய்வமாய் இருந்து காத்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை வெற்றி பெற செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.