தமிழகம்

இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை

நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை (21-ந்தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் அந்தந்த வாக்குசாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த தேர்தல் இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு பரிசோதித்து காண்பிக்கப்படும்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

தேர்தல் நடக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இதுவரை ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பிலான பணம், நகை, மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை அங்கு போடப்பட்ட வழக்குகள் மற்றும் புகார்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட 2.87 லட்சம்விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். சீமான் சர்ச்சை பேச்சு குறித்தான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வழங்கியதும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம்.

இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.