சிறப்பு செய்திகள்

தி.மு.க.வை விட கழக ஆட்சியில் தான் பெண்களுக்கு அதிக அளவு கடனுதவி – ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி

திருநெல்வேலி:-

தி.மு.க.வை விட கழக ஆட்சியில் தான் பெண்களுக்கு அதிக அளவு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து சீவலப்பேரியில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி 18.10.2019 அன்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களால் கட்டி காக்கப்பட்ட மாபெரும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அம்மாவின் வழியில் இந்த அரசு மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மக்களுக்காக அறிவிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும், அதை தடுக்கும் வகையில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

எத்தனை தடைகள் வந்தாலும், மக்களுக்காக அறிவித்த அனைத்து திட்டங்களையும் அம்மாவின் அரசு நிறைவேற்றியே தீரும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, கட்சி பாகுபாடு இன்றி அறிவித்த அனைத்து மக்கள் நல திட்டங்களையும் வழங்கி வரும் அரசு அம்மாவின் அரசு கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை முதன்மைத்துறையாக விளங்கி கொண்டிருக்கிறது. அறிவுப்பூர்வமான கல்வி அளிப்பதன் மூலம் ஒரு மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடைகிறது. தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக இருந்தது. ஆனால் இன்று தமிழகத்தில் 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தாய்சேய் நலன்களை பாதுகாத்திட அம்மா தாய்சேய் நல பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தேவை என்பதை கருத்திலே கொண்டு அம்மாவின் அரசு 12,524 ஊராட்சிகள் 528 பேரூராட்சிகளில் ரூ.65 கோடி செலவில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான அனைத்து வகையான உடற்பயிற்சி உபகரணங்களும் வழங்கப்படும்.

விளையாட்டு துறையில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு பொது நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு தந்த அரசு அம்மாவின் அரசு. ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில் 48 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.6,812 கோடி செலவிடப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 11,45,904 பயனாளிகளுக்கு 5,274 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவியாக ரூ.3,954 கோடி வழங்கி சாதனை நிகழ்த்திய அரசு அம்மாவின் அரசு.

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்கப்படவில்லை. ஏனென்றால் அவர்களது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படாததாலும், அதிக அளவு மின்வெட்டு இருந்ததாலும் யாரும் தொழில் தொடங்க முன்வரவில்லை ஆனால் தற்போது புதிய தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 2019ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 5 லட்சம் படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும், 5.5 லட்சம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் ரூ.9,838 கோடி மட்டுமே கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2011 முதல் 2019 வரை அம்மாவின் அரசால் ரூ.57,314 கோடி கடன், வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இந்த அரசு வழிவகை செய்துள்ளது. தமிழ்நாட்டில் 6,81,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

மகளிர் மேம்பாட்டிற்காக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த செயல்பட்டுவரும் அரசு அம்மாவின் அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். முதியோர் உதவித்தொகை கடந்த தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டதை விட தற்போது 10 லட்சம் நபர்களுக்கு கூடுதலாக இந்த அரசு வழங்கி வருகிறது. மேலும், 5 லட்சம் நபர்களுக்கு கூடுதலாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி ரூ.14,700 கோடி ஊதிய உயர்வு இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியும் வழங்கப்படுகிறது. தற்போது 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உயர்வு அம்மாவின் அரசால் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வண்டிக்கு இரு சக்கரம் போல, ஒன்று அரசு, மற்றொன்று அரசு ஊழியர்கள். இரண்டு சக்கரமும் சரியாக இயங்கினால் தான் இலக்கை அடைய முடியும். அரசு ஊழியர்களுக்கு மதிப்பளிக்கின்ற அரசு.

அவர்களைப் போற்றுகின்ற அரசு அம்மாவின் அரசு. அரசு, திட்டங்களை அறிவிக்கலாம், அந்த திட்டங்களின் பயன்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்களும், அரசை வழிநடத்தி செல்லக்கூடியவர்களும் அரசு ஊழியர்கள் தான். எனவே, அரசு ஊழியர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு தூண்டிவிட பார்க்கிறார். அரசு ஊழியர்கள் நன்கு தெளிவு பெற்றுவிட்டார்கள். இந்த அரசுக்கு உறுதுணையாக இருந்து அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இந்த அரசு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போது அந்த கட்சி நல்ல கட்சி என கூறி வந்தனர். ஆனால் இப்போது அ.இ.அ.தி.மு.க பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேரும் போது பாரதிய ஜனதா கட்சி மக்கள் விரோத கட்சி என ஸ்டாலின் குறை கூறுகிறார். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவி சுகத்தை அனுபவிக்கும் வரை நல்ல கட்சி என தெரிவிக்கும் ஸ்டாலின். பதவி இல்லை என்றவுடன் அந்த கட்சியை குறைகூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை. தி.மு.க.விற்கு எந்த கொள்கையும் இல்லை.

பதவிக்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும் கட்சி தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியிலே இருந்து அமைச்சரவையிலும் அங்கம் வகித்திருந்தார்கள். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சி தி.மு.க. குரங்கைப் போல மரத்துக்கு மரம் தாவும் கட்சியாக தி.மு.க. இருக்கிறது. தி.மு.க ஒரு கட்சியே கிடையாது.

அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. 2006 முதல் 2011 வரை நடைபெற்ற தி.மு.க ஆட்சியில் கடும் மின்வெட்டு ஏற்பட்டு எப்போது மின்சாரம் வரும், எப்போது மின்சாரம் போகும் என்று தெரியாத நிலையில் பொது மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளானார்கள். 2011 சட்டமன்ற தேர்தலின் போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அ.இ.அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தை மின்வெட்டே இல்லாத மாநிலமாக உருவாக்கிக் காட்டுவேன் என அறிவித்தார். அதற்கான திட்டங்களை வகுத்து 16,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உருவாக்கியப் பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும்.

விவசாயிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக இந்த அரசு நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் 2017-ம் ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,519 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் 2018-ம் ஆண்டு 1,514 ஏரிகள் தூர்வார ரூ.328 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,829 ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

கீழநத்தம் ஊராட்சி கே.டி.சி.நகர் பகுதியில் 20,000 மக்கள் வசிக்கின்றார்கள் இந்த மக்களுக்கு புதிய தார்சாலை அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள் இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றித்தரும். அதே போன்று குடிநீர் பிரச்சனையை தீர்க்க புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தரப்படும். சீவலப்பேரி கிராமம் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை கலியாவூர், குலகுடி, சிங்காத்தகுறிச்சி போன்ற 10 பாசனக் குளங்களில் நீரேற்றுவதற்கு ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. மேலும், இந்த பகுதியில் உள்ள சில கோரிக்கைகளை இந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வரும் நாராயணன் நிறைவேற்றித் தருவார் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, இதுபோன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து தொகுதி மக்களுக்கு கிடைத்திட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணனுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.