தற்போதைய செய்திகள்

4 ஆண்டுகளில் 340 துணை மின் நிலையங்கள் – சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தகவல்

சென்னை

இந்த நான்கு ஆண்டு காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 340 துணை மின் நிலையங்கள் அமைப்பட்டிருக்கின்றன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று உறுப்பினர்களுக்கு அளித்த பதிலுரை வருமாறு:

உறுப்பினர் சிவ. வீ.மெய்யநாதன்: ஆலங்குடி தொகுதி, மேற்பனைக்காடு ஊராட்சி, மேலக்காடு புதுக்குடியிருப்பில் மின்மாற்றி அமைக்க அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் பி.தங்கமணி:- உறுப்பினர் கேட்கும் மேலக்காடு, புதுக்குடியிருப்பு பகுதிக்கு தற்சமயம் மேற்பனைக்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ள 100 கே.வி.ஏ மின்மாற்றியின் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இப்போது மின்பளு வெறும் 86 MVA மட்டும் தான் இருக்கின்றது. எதிர்காலத்தில் மின்பளு அதிகமான தேவையிருப்பின் கூடுதலாக மின்மாற்றிகள் அமைத்துத் தரப்படும்.

உறுப்பினர் சிவ. வீ. மெய்யநாதன்: – ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்பனைக்காடு ஊராட்சி, மேலக்காடு புதுக்குடியிருப்பு பகுதியில் புதிய மின்மாற்றி கேட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அந்தப் பகுதியில் தற்போதும் மின்தடை அடிக்கடி ஏற்படுகின்ற காரணத்தினால், புதிய மின்மாற்றி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, புதுக்கோட்டை விடுதி ஊராட்சி, கும்மங்குலம் பகுதியிலும், திருநாலூர் ஊராட்சி, திருநாலூர் தெற்கு மாரியம்மன் கோவில் பகுதியிலும், ஆயிங்குடி ஊராட்சி,

ஆயிங்குடி மையம் அதேபோல Ad colony பகுதியிலும், மாங்குடி ஊராட்சி, மருதங்குடியிலும், மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சி-அய்யனார் கோயில் அருகிலும், மாங்காடு ஊராட்சி-மாங்காட்டான்கொள்ளை, தடியமனை, பெரியகொள்ளை ஆகிய பகுதிகளில் புதிய மின்மாற்றிகளும் அதே போல் ஆலங்குடி தொகுதியில் குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில் அதிகமாக நடந்து வருவதால், அடிக்கடி மின்மாற்றிகள் பழுதடைந்து விடுகின்றன. அதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றார்கள். அதனை போக்குகின்ற வகையில் புதிய மின்மாற்றிகளை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுப்பாரா?.

அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் கோரிய மேலக்காடு, புதுக்குடியிருப்பு பகுதியில் இப்போது 50 வீட்டு மின் இணைப்புகளும், 10 விவசாய மின் இணைப்புகளும், ஒரு மேல்நிலைத் தொட்டியும், மொத்தம் 86 கே.வி. ஆகத்தான் இருக்கிறது. இருந்தாலும் கூட உறுப்பினர் கோரியபடி இப்போது புதிய மின்மாற்றி அமைப்பதற்கு High voltage system லிருந்து, அதாவது HT line லிருந்து நேரடியாக மின்மாற்றிக்கு வந்து, அங்கிருந்து LT line மூலமாக செல்லும். இப்பொழுதெல்லாம் பிரித்து 63 கே.வி.ஏ, அதேபோல 25 கே.வி.ஏ என்று மாற்றி 25 கே.வி.ஏ. மின்சாரத்திற்கும் 63 கே.வி.ஏ. தொழிற்சாலைகளுக்கும் மற்ற வீடுகளுக்கும் கொடுக்கின்ற வகையில் HT line நேரடியாக கொண்டு வரும் system இப்போது கொண்டு வர இருக்கிறோம். அதனை கொண்டு வந்து, அந்த மின்மாற்றியை 90 நாட்களுக்குள் மாற்றி அமைத்து கொடுக்கப்படும்.

உறுப்பினர் இன்னும் பல்வேறு பகுதிகளில் அந்த மின்மாற்றிகளை மாற்றி தர வேண்டும் என்று கேட்டார். அங்கே மின் பளு அதிகமாக இருந்தது என்று சொன்னால், அம்மாவினுடைய அரசு அதிகமான அளவில் நாங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறோம். புதுக்கோட்டை பகுதியைப் பொறுத்தவரை நீங்கள் அதிகமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நானும் அதிகாரிகளிடத்தில் சொல்லியிருக்கிறேன்.

அங்கே விவசாயம் நிறைந்த பகுதியாக இருக்கின்ற காரணத்தினால் அடிக்கடி மின் பளு குறைவாக இருக்கிறது என்ற புகார் வருகின்றது. ஆகவே, அங்கே ஆய்வு செய்து, உறுப்பினர் கேட்ட பகுதியில் எந்தெந்தப் பகுதியில் மின் பளு குறைவாக இருக்கின்றதோ, அங்கே மின்மாற்றி மாற்றியமைக்க வேண்டுமென்று சொல்லி இருக்கின்றேன். அதனால் உறுப்பினர் சொன்ன பகுதியிலே மின்பளு இருந்ததென்றால், உடனடியாக மாற்றித்தரப்படும்.

உறுப்பினர் சிவ.வீ. மெய்யநாதன்: எனது மூன்று ஆண்டுகால கோரிக்கையான வம்பன் பகுதியிலே 110/22 கே.வி திறன் கொண்ட துணை மின் நிலையமும், அதேபோல, L.N.புரம் ஊராட்சி, அணவயல் கிராமத்தில் துணை மின் நிலையமும், கொத்தமங்கலம் ஊராட்சியில் கொத்தமங்கலம் கிழக்கு பகுதியில் துணை மின் நிலையமும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன்.

அதேபோல, மறமடக்கி ஊராட்சியில் மறமடக்கி பகுதியில் தற்போது 33/11 கே.வி திறன் கொண்ட துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. அந்தப் பகுதியிலே அடிக்கடி மின் பற்றாக்குறை, மின்பளு குறைவு காரணமாக, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனைப் போக்குகின்ற வகையில், அதனை 110/11 கே.வி திறன் கொண்ட துணை நிலையமாக தரம் உயர்த்தப்படுமா?.

அமைச்சர் பி. தங்கமணி: உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அன்றைய தினமே வேறு ஒருவர் கேட்கின்ற போது கூட நான் சொன்னேன். இந்த வம்பன் துணை மின் நிலையம் அமைப்பதற்காக இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது ஒப்பந்தப்பள்ளி கோருகின்ற நிலைமையில் இருக்கிறது. ஓராண்டுகாலத்திற்குள் அந்தப் பணி முடிந்து விடும். L.N.புரம் துணை மின்நிலையம் புதிதாகக் கேட்டிருக்கிறீர்கள். அருகாமையிலே ஆவனம் பகுதியில் துணை மின்நிலையம் இப்போது புதிதாக அமைப்பதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அப்போது அங்கு ஒரு துணை மின்நிலையம் அமைக்கின்ற போது L.N.புரம் துணை மின்நிலையம் தேவையில்லை. ஏனென்றால், ஆவனம் என்பது அருகாமையிலே தான் இருக்கிறது.

மற்ற பகுதியில் துணை மின்நிலையம் வேண்டுமென்று உறுப்பினர் சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் தான் ஏற்கெனவே சொல்லியிருக்கின்றோம். துணைமின் நிலையம் அமைப்பதைப் பொறுத்தவரை, பொதுவாக வருடத்திற்கு 50, 60 துணை மின்நிலையம் தான் அமைப்பார்கள். ஆனால், இந்த நான்கு ஆண்டு காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 340 துணை மின் நிலையங்கள் அமைப்பட்டிருக்கின்றன. டெல்டா மாவட்டத்தைப் பொறுத்தவரை நான் ஏற்கெனவே பலமுறை சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறேன்.

அந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதி என்ற காரணத்தினால், மின் அழுத்தம் குறைவாக இருக்கிறது என்று எங்கெல்லாம் புகார்கள் வருகின்றனவோ, அங்கெல்லாம் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணமாகும். அந்தவகையில், இடம் கிடைக்கின்ற பகுதியில், நாங்கள் ஆய்வு செய்து, தேவையிருப்பின், துணை மின்நிலையம் அமைத்து வருகிறோம். மாண்புமிகு உறுப்பினர் சொன்ன அந்தப் பகுதியெல்லாம் குறித்து வருகின்றோம். ஆக, மாண்புமிகு உறுப்பினர் சொன்ன இடங்களில் துணை மின்நிலையம் அமைப்பது குறித்து, நாங்கள் அதிகாரிகளின் மூலம் ஆய்வு செய்து, தேவையிருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்.