தமிழகம்

தீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.

சென்னை:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில்  கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வரும் 24 ஆம் தேதி முதல் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் கேகே நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தினசரி இயக்க கூடிய 2225 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளாக 4265 பேருந்துகள் என மொத்தமாக சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பிற ஊர்களிலிருந்து மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு வாயிலாக இதுவரை சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 43 ஆயிரத்து 635 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 23 ஆயிரத்து 138 பயணிகளும் என மொத்தம் 66,773 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் 3 கோடியே 26 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை வரும் 24 ஆம் தேதி போக்குவரத்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போல் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக முன்பதிவு  செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் கணினி மூலமாக உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு கவுன்ட்டர்கள் உள்பட 30 கவுன்ட்டர்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.