தற்போதைய செய்திகள்

அங்கன்வாடி மையங்களில் குடிநீர்,கழிப்பிட வசதிகள் – சட்டப்பேரவையில் அமைச்சர் வெ.சரோஜா அறிவிப்பு…

சென்னை

அங்கன்வாடி மையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் வெ.சரோஜா அறிவித்தார்.

சட்டப்பேரவையில்  சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 43,282 சத்துணவு மையங்கள் வாயிலாக 49 லட்சம் பயனாளிகளுக்கு சுவைமிக்க சூடான 13 வகையான கலவை சாதங்கள் வாரம் 5 முட்டைகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் உணவுப் பொருட்களை சுகாதார முறையில் பராமரிக்கவும், அன்றாடம் சத்துணவினை பாதுகாப்பான முறையில் சமைப்பதற்கும் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெவ்வேறு அளவுகோலின்படி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் அணைப்படி முதல்கட்டமாக சத்துணவு மையங்கள் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் முடிவடைந்த 2167 மையங்கள், ரூ.2.16 கோடி செலவினத்தில் புதுப்பிக்கப்படும்.

மூன்றாம் பாலினர்கள் தானாக முன்வந்து தங்களை பதிவு செய்து கொண்டு அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொள்ளவும், அவர்களது கல்வித்தகுதி, பயிற்சி மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையில் ஏற்ற ஒரு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளவோ அல்லது சுயதொழில் மேற்கொள்ளவோ உதவும் வகையில் மூன்றாம் பாலினர்களுக்கென ஒரு தனி கைப்பேசி செயலி ரூ.10 லட்சம் செலவினத்தில் உருவாக்கப்படும்.இச்செயலி மூலம் அனைத்து மூன்றாம் பாலினர்களுடைய வயது, முகவரி, கல்வித்தகுதி, பிற பயிற்சி பெற்ற விபரம் போன்ற விவரங்களின் பதிவு முழுமையான மேற்கொள்ளப்படும்.

மூன்றாம் பாலினர்களின் பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதன்மூலம் மூன்றாம் பாலினர்கள் இச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய தனித் திறனுமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர்.

இவ்வாறு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மூன்றாம் பாலினரை சிறப்பிக்கும் வகையிலும், இதர மூன்றாம் பாலினர்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும் மூன்றாம் பாலினருக்கான மாநில விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்று ஆகியவை வழங்கப்படும்.

அரசு அங்கன்வாடி மையங்கள் தரத்தினை மேலும் மேம்படுத்தும் பொருட்டும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையிலும் 2381 அங்கன்வாடி மையங்களில் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து ஏற்கனவே மாண்டிச்சோரி முறையிலான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு சுமார் 61 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகுப்புகள் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில் வட்ட வடிவிலான மேசை மற்றும் நாற்காலிகள் 1031 அங்கன்வாடி மையங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்போது மீதமுள்ள 1350 அங்கன்வாடி மையங்களுக்கு வட்ட வடிவிலான மேசை மற்றும் நாற்கால்கள் சுமார் ரூ.1.22 கோடி செலவிலும், 220 அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான மின்விசிறிகள் ரூ.22 லட்சம் செலவிலும் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 46,922 அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டடங்களிலும் மற்றவை அரசு மற்றும் இதர கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையங்களுக்கு வருகை புரியும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு மையங்களில் தற்போது உள்ள தண்ணீர் வசதி ரூ. 1.14 கோடி செலவில் 1137 அங்கன்வாடி மையங்களில் மேம்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் சுகாதாரத்தை பேணும் வகையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தை நேய கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. 2019-2020-ம் ஆண்டில் 1282 அங்கன்வாடி மையங்களில் குழந்தை நேய கழிப்பிடம் அமைப்பதற்கு ரூ.1.54 கோடி செலவிடப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து, தாய், சேய் பராமரிப்பு, முன்பருவக் கல்வி போன்றவை குறித்து மக்களிடையே தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கிய பணியாகும். இது குறித்து இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் கள பணியாளர்களுக்கும் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை சிறப்பாக செய்வதற்கு உதவியாக 31 மாவட்ட திட்ட அலுவலகங்களுக்கும் ரூ.21 லட்சம் செலவில் எல்.சி.டி., புரோஜக்டர் மற்றும் இதர உபகரணங்கள் இந்த நிதியாண்டில் வழங்கப்படும்.

அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்த 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள், 11 வயது முதல் 14 வயதுடைய பள்ளி செல்லாத வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என சுமார் 32 லட்சம் நபர்களுக்கு இணை உணவாக சத்துமாவு வீட்டிற்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வீட்டிற்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் வழங்கப்படும் சத்துமாவை பயனாளிகள் குடும்பத்தில் பயன்படுத்துவது குறித்து மாதிரி கள ஆய்வு ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

சென்னை கெல்லீசில் இயங்கி வரும் சமூகப் பாதுகாப்பு ஆணையரக அலுவலக கட்டடத்தில் தற்போது சமூக பாதுகாப்பு ஆணையரகம், மாநில குழந்தை பாதுகாப்பு சங்க அலுவலகம், மாநில தத்து வள ஆதார அமைப்பு அலுவலகம், கண்காணிப்பு மற்றும் கணிப்பாய்வு பிரிவு அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும் முதன்மை நன்னடத்தை அலுவலர் மற்றும் வடமண்டல நன்னடத்தை அலுவலர்களுக்கான அலுவலக அறையும் மேற்படி கட்டடத்தில் இயங்கி வருகின்றன.

இச்சூழ்நிலையில் மேற்கூறிய அனைத்து அலுவலகங்களுக்கும் சமூகப் பாதுகாப்பு ஆணையர் அலுவலக கட்டடத்தில் இயங்குவதற்கு போதிய இடவசதி இல்லை. எனவே சென்னை கெல்லீசில் இயங்கி வரும் சமூகப் பாதுகாப்புத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தேவையான வசதிகளுடன் இணைப்பு கட்டடத்தில் இரண்டாம் தளம் கட்டுவதற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டம், இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தை அமல்படுத்துவதை உதவுவதோடு சிரமமான சூழ்நிலையிலுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலை உருவாக்குவதற்காகவும் அமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, வளர்ச்சியை கண்காணிப்பது மற்றும் மறுவாழ்வு குறித்த விவரங்களை, குழந்தைகளை கையாளும் அனைத்து தரப்பு அலுவலர்கள் மற்றும் அமைப்புகள் அறிவதற்கு குழந்தைகள் குறித்த தரவுகளை இணையத்தின் மூலம் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும் என்பதால் குழந்தை தகவல் அமைப்பு என்ற மென்பொருள் உருவாக்குவது அவசியமாகிறது. இம்மென்பொருள் ரூ.65 லட்சம் செலவில் தமிழ்நாடு மின்னாளுமை முகமை உதவியுடன் உருவாக்கப்படும்.

அரசு குழந்தைகள் இல்லங்களில் மிகவும் பின்தங்கிய வறுமையான குடும்பத்தை சார்ந்த மற்றும் பல்வேறு சமூக சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் நிலையில் உள்ள குழந்தைகள் தங்க வைத்து பராமரிக்கப்படுகின்றனர். இவர்களின் நலன் சார்ந்த வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளை நடத்த தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லத்தில் பல்நோக்கு கூடம் ஒன்றும், செங்கல்பட்டு ஆத்தூரில் உள்ள அரசு பிற்காப்பு நிறுவனத்தில் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் நடத்துவதற்கு பயிற்சி மையக் கட்டடம் ஒன்றும், கட்டப்பட வேண்டியுள்ளது. இவை அனைத்தும் மொத்தம் ரூ.1.30 கோடி செலவில் கட்டப்படும்.

சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படும் சிறுவர்களின் குறுகிய கால பராமரிப்பிற்காக ஒரு வரவேற்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இவ்வரவேற்பு பிரிவில் சிறார்கள் அதிகபட்சமாக 4 மாத காலம் வரை தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அறை, ஆற்றுப்படுத்துதல் அறை, பொழுதுபோக்கு அறை, செயல்பாட்டு அறை ஆகிய வசதிகளை ஏற்படுத்த ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வரவேற்பு பிரிவு கட்டடத்தில் முதல் தளம் மற்றும் அலுவலக அறை கட்டப்பட வேண்டி உள்ளது. எனவே சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள வரவேற்பு பிரிவில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதல் தளம் மற்றும் கூடுதல் கட்டடங்கள் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா அறிவித்தார்.