தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநகர பேருந்துகள் 3 நாள் 24 மணி நேரமும் இயக்கம்

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கோ.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிகள் வகையில் 24.10.2019 முதல் 26.10.2019 வரை 3 நாட்கள் வெளியூர் செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்துநிலையம், கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையங்களுக்கு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்கண்ட 5 பேருந்துநிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட தூர பேருந்துகளில் பயணித்திட ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் இன்று 24.10.2019 முதல் 26.2019 வரை 3 நாட்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.