தமிழகம் தற்போதைய செய்திகள்

வரும் 31-ந்தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் – பேரவை தலைவர் அறிவிப்பு

சென்னை

வரும் 31-ந்தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று பேரவை தலைவர் தனபால் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாத கூட்டம் சென்ற 11-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து ஏப்ரல் 8, 9-ந்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது. தமிழக அரசு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் கட்சியினர் பேரவை தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பேரவையில் பேரவை தலைவர் ப.தனபால் தற்போது நடைபெற்று வரும் மானிய கோரிக்கை மீதான விவாத கூட்டம் வரும் 31-ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவித்தாவது:-

வரும் திங்கள்கிழமை (23-ந்தேதி) காலை இறுதி துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தல், முன்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்தல், மற்றும் தொடர்ந்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை, செய்தி மற்றும் விளம்பரம்துறை, எழுத்து பொருள் மற்றும் அச்சு துறைக்கான மானிய கோரிக்கை நடக்க உள்ளது. செவ்வாய்க்கிழமை (24-ந்தேதி) காலை தொழில்துறை மீதான மானிய கோரிக்கையும், மாலை வணிக வரி, பத்திரப்பதிவு மற்றும் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை நடக்கிறது.

தொடர்ந்து புதன்கிழமை (25-ந்தேதி) தெலுங்கு வருட பிறப்பு அரசு விடுமுறை ஆகையால் பேரவைக்கு விடுமுறை. 25-ந்தேதி காலை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாலை இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், நிருவாகம்,போக்குவரத்துத் துறை, 27-ந்தேதி காலை காவல், தீயணைப்புத்துறை, மாலை சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, 28-ந்தேதி காலை வேளாண்மைத்துறை, மாலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், 29-ந்தேதி அரசு விடுமுறை.

30-ந்தேதி காலை தகவல் தொழில் நுட்பவியல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, மாலை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி 31-ந்தேதி காலை பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், அரசின் சட்டமுன்வடிவுகள், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெறும். பேரவை காலை கூட்டம் 10 மணிக்கு துவங்கும். மாலை கூட்டம் 5 மணிக்கு கூடும்.

இவ்வாறு சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.