தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை, சென்னையில் கடற்கரைகள் மூடல் : மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் கடற்கரைகள் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாரத பிரதமர் இன்று (22.03.2020) பொதுமக்கள் சுய ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், அனைத்து அங்கன்வாடி மையங்கள், மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை 31.03.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முறைப்படி கை கழுவும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அதிகமாக பொதுமக்கள் கூடுமிடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகள் நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக உள்ளன. எனவே கடற்கரை பகுதிக்கு வருகை புரியும் பொதுமக்களின் நலன் கருதியும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையிலும் மெரினா, திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைகள் 21.03.2020 மாலை 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.