தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டிலிருந்து நோயாளிகள் சென்னை வர தேவையில்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் – பேரவையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெருமிதம்

சென்னை

செங்கல்பட்டிலிருந்து நோயாளிகள் சென்னை வர தேவையில்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, செங்கல்பட்டு தொகுதி உறுப்பினர் வரலட்சுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 1,343 படுக்கை வசதிகளுடன் கொண்ட மருத்துவம், மருத்துவ சாரா மற்றும் பிற துறைகள் உள்ளடக்கிய 36 பிரிவுகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

1965ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மருத்துவ கல்லூரி 50 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இவ்வளவு நாட்களாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது முதலமைச்சரின் அரசு அந்த இடங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி கொடுத்துள்ளது என பதில் அளித்தார். அப்போது திமுக உறுப்பினர் இது தவறான தகவல் என்றார். இதற்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நான் தெரிவித்த தகவல் தவறு இல்லை.இதற்கு நான் பொறுப்பேற்றுகொள்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது.

அங்கு பல்வேறு சிறப்பு துறைகள், விபத்து காய சிகிச்சை மையம், சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் வழங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுகிறது.எம்.ஆர்.ஐ.ஸ்கேன், இருதய சிகிச்சை அளிக்க பயன்படும் கேத்லேப் உள்ளிட்டவை அங்கு அமைத்து தரப்பட்டுள்ளன. மேலும் செங்கல்பட்டில் ரூ.100 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான யோகா, இயற்கை சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.

பிளாஸ்டி சர்ஜரி, யூராலஜி உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்படுகின்றன. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சமாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 8 லட்சமாக அதிகரித்துள்ளது. அதற்கேற்றவாறு மருத்துவமனைகளில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே செங்கல்பட்டிலிருந்து நோயாளிகள் சென்னை வர தேவையில்லை என்றார்.