தற்போதைய செய்திகள்

புதுவை உப்பளம் தொகுதி மக்களுக்கு கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் – அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை

புதுச்சேரி

புதுவை உப்பளம் தொகுதி மக்களுக்கு கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில கழக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் விட்டுவிட்டு தொடர் மழை பெய்து வருவதால் கழிவுநீர் வாய்க்கால் உடைப்பு, சாலை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நின்று வருகிறது. ஏழை, எளியோர் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் குப்பை கூலங்கள் வாரப்படாமல் அழுத்தம் ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தலைவலி, காய்ச்சல், இருமல், சளி தொல்லை, வாந்தி பேதி என ஆரம்பித்து டெங்கு, மலேரியா போன்ற விஷ காய்ச்சலால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே பல இடங்களில் தொடர் தொற்று நோயால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அரசு பொது மருத்துவமனை மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் கூட இருப்பு இல்லாமல் உள்ளது. அரசு பொது மருத்துவமனையில் அதிகப்படியான படுக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் காய்ச்சல் வந்த மக்களுக்கு கொடுக்க நிலவேம்பு கசாயம் கூட அரசிடம் தயார் நிலையில் இல்லை. எனது தொகுதி குடிசைகள் நிறைந்த தாழ்வான பகுதி என்பதாலும் கழிவு நீர் வாய்க்காலின் மையப் பகுதியாக இருப்பதாலும் மக்கள் பல்வேறு நோய்களின் உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதை அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நிலவேம்பு சூரணம் வழங்குமாறு கேட்டதற்கு அரசிடம் போதிய கையிருப்பு இல்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நிலவேம்பு கசாயம் கூட மக்களுக்கு வழங்க கையிருப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவிப்பது மிகுந்த வேதனை தரும் விஷயமாகும்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது உப்பளம் தொகுதியில் உள்ள வாணரப்பேட்டை, ராசு உடையார்தோட்டம், பிரான்சுவா தோட்டம், திப்ராயப்பேட்டை, உடையார் தோட்டம், அவ்வை நகர், நேதாஜி நகர் 1, 2, 3, உள்ளிட்ட தொகுதி முழுவதும் நிலவேம்பு கசாயத்தை கழக தொண்டர்கள் தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த கசாயத்தை இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பருகி தொற்று நோய்களிலிருந்து மக்கள் அரசை நம்பாமல் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.