தற்போதைய செய்திகள்

தமிழக உள்ளாட்சித்துறைக்கு 12 தேசிய விருதுகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்

புதுடெல்லி:-

தமிழ்நாடு அரசின் சார்பில், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் 12 தேசிய விருதுகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் நேற்று புதுடெல்லியில் பெற்றுக் கொண்டார்.

மத்திய அரசின் சார்பில், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைளை ஊக்குவிக்கும் வகையில், ஊராட்சிகளில் தகவல் மற்றும் தகவல் தொழில் நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் e-Panchayat Puraskar விருதும்,
அதேபோல, ஊராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், கூடுதல் நிதி மற்றும் பணியாளர்களை அளித்து ஊராட்சிகளின் திறனை மேம்படுத்திய வகையில், மாவட்ட அளவில் சேலம் மாவட்டத்திற்கும்,

ஒன்றிய அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஊராட்சிகள் அளவில், சேலம் மாவட்டம் கோனூர் கிராம ஊராட்சி, கோவை மாவட்டம் மத்வராயபுரம் கிராம ஊராட்சி, நாமக்கல் மாவட்டம் அரசபாளையம் கிராம ஊராட்சி, ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையம் கிராம ஊராட்சி, மதுரை மாவட்டம் கோவில்பாப்பாக்குடி கிராம ஊராட்சி, திருவண்ணாமலை மாவட்டம் எஸ்.யு.வனம் கிராம ஊராட்சி ஆகிய 6 கிராம ஊராட்சிகளுக்கு தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதும்,
திருப்பூர் மாவட்டம், ராவணப்புரம் கிராம ஊராட்சிக்கு வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்தமைக்கான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபை தேசிய விருதும்,

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் கிராம ஊராட்சிக்கு குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது என மொத்தம் 12 தேசிய விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அம்மாவின் அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கடந்த 8 ஆண்டுகளில் (2011-2019 வரை) ரூ.17,199 கோடி மதிப்பீட்டில் 78,190 கி.மீ சாலைப் பணிகள், ரூ.6,329 கோடி மதிப்பீட்டில் 3.86 லட்சம் குடிநீர் திட்டப் பணிகள், ரூ.875 கோடி மதிப்பீட்டில் 20.87 லட்சம் தெரு விளக்குகள், ரூ.807.63 கோடி மதிப்பீட்டில் 543 பாலங்கள், ரூ.654 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், ஊரகப் பகுதிகளில் இதுவரையில், 49.86 லட்சம் தனிநபர் இல்லக் கழிவறைகள் அமைத்து சாதனை புரிந்துள்ளது. மேலும், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இதுவரை 15.14 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை செயல்படுத்துவதில், தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது. அனைத்து 12,524 கிராம ஊராட்சிகளும் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக மாற்றம் அடைந்துள்ளன.

மேலும், கடந்த 02.10.2019 அன்று பாரத அளவில் ஊரக தூய்மைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தூய்மைப் பணிகள், தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டியது, அங்கன்வாடிகள், பள்ளிகள் தூய்மை பராமரிப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு ஒட்டுமொத்த சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால், தமிழகத்திற்கு மத்திய அரசின் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருது மகாத்மா காந்தி பிறந்த தினத்தன்று குஜராத்தில் வழங்கப்பட்டது.

அதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 5 தேசிய விருதுகளும், மத்திய அரசின் கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ், குறிப்பிட்ட 7 முக்கிய திட்டங்களில் தன்னிறைவு எய்தி சிறப்பாக செயல்படுத்தியமைக்கான தேசிய விருதையும் மத்திய அரசு கடந்த 11.09.2018ல் அன்று வழங்கியுள்ளது.

தேசிய அளவில் ஊரக வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, மத்திய அரசு 2012 முதல் இதுவரையில் 12 மாநில அளவிலான தேசிய விருதுகள், 19 மாவட்ட அளவிலான தேசிய விருதுகள், 12 ஊராட்சி ஒன்றிய அளவிலான தேசிய விருதுகள், 43 கிராம ஊராட்சிகள் அளவிலான தேசிய விருதுகள் என மொத்தம் 86 தேசிய விருதுகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி பெருமை சேர்த்துள்ளது. இதுபோன்று மத்திய அரசு தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்குவது தமிழ்நாடு அரசுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.