தற்போதைய செய்திகள்

198 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்

தூத்துக்குடி

எட்டையபுரத்தில் அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாளையொட்டி 198 பயனாளிகளுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபத்தில், தமிழக அரசின் சார்பில் அமுதகவி உமறுப்புலவரின் 377-வது பிறந்த நாள் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, கலந்து கொண்டு அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் மலர்போர்வை போர்த்தி, மலர்தூவி, மரியாதை செலுத்தினார். மேலும், வருவாய்த்துறையின் மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 34 பயனாளிகளுக்கு ரூ.1,53,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,

மகளிர் திட்டத்தின் மூலம் 27 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் ரூ.6,75,000 மதிப்பிலும், கூட்டுறவுத்துறையின் மூலம் 3 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.69,50,000 கடன் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.2,84,165 மதிப்பிலும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.17,865 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் 05 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை என மொத்தம் 198 பயனாளிகளுக்கு ரூ.80.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், விடுதலைப் போராட்ட தியாகிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் உள்ளிட்ட பல்வேறு தியாகிகள் கொண்ட புன்னிய பூமியாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில், தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகமான மணிமண்டபங்கள் கட்டப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மன்னர் காலத்தில் இருந்த குடிமராமத்து பணிகளை அம்மாவின் அரசு தமிழகத்தில் செயல்படுத்தி மழைநீர் சேமிப்பதற்காகவும், உயர்த்துவதற்காகவும் நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் இன்று அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியில் தான் பல்வேறு சிறப்பு வாய்ந்த தலைவர்களுக்கு மண்டபங்கள் கட்டப்பட்டு அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. மணிமண்டபம், எட்டயபுரத்தில் பாரதியார் இல்லம் மற்றும் மணிமண்டபம், வல்லநாட்டில் வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம், கயத்தாறில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் மணிமண்டபம் கட்டப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

விளாத்திக்குளத்தில் இசை மேதை நல்லப்பசுவாமிக்கு நினைவுத்தூணும், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. 2016-ம் ஆண்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக எட்டயபுரத்தில் அமைந்துள்ள அமுதகவி உமறுப்புலவர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என கையெழுத்திட்டேன். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியில் தான் திப்பு சுல்தானுக்கு திண்டுக்கல்லில் மணிமண்டபம் கட்டப்பட்டு, முதலமைச்சர் திறந்து வைத்தார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது 40 தலைவர்களுக்கு அரசு விழாவாக முதலமைச்சர் அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் அன்னாரது விழாக்கள் அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அமுதகவி உமறுப்புலவர் பிறந்த நாள் விழாவில் பல்வேறு துறைகள் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அமுதகவி உமறுப்புலவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது தமிழ் தொண்டை அறிந்து கொள்ளும் வகையில், ஒரு சிறப்பான நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கூட்டுறவுத்துறை சார் பதிவாளர்கள் கோவில்பட்டி செண்பகவல்லி, தூத்துக்குடி முருகன், உமறுப்புலவர் சங்க தலைவர் காஜாமைதீன், எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர், எட்டயபுரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, எட்டயபுரம் பேருராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரை பாண்டியன், விஜயபாண்டியன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன் வரவேற்றார். முடிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ( நி.சைய்யது முகம்மது நன்றி கூறினார்.