தற்போதைய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலிலும் கழக கூட்டணி தொடரும் – முதலமைச்சர் பேட்டி

கோவை

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் கழகம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் கழக கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றி குறித்த உங்கள் கருத்து?
பதில்:- விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி என நாங்கள் கருதுகிறோம்.ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலினும், அவருடைய தோழமைக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து அதன் மூலம் வெற்றி பெற்றார்கள். ஆனால், இப்பொழுது உண்மை தெரிந்து விட்டது. உண்மை தெரிந்த காரணத்தினால், உண்மையைச் சொல்கின்ற எங்களுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களையும், மேலும், பல்வேறு புதிய திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதில், குடிமராமத்துத் திட்டம் ஒரு சிறப்பான திட்டம். அதேபோல, அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி போன்றவற்றை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். பல்வேறு துறைகளில் சாதனை படைத்து தேசிய அளவில் விருதுகளைப் பெற்றிருக்கிறோம். உள்ளாட்சித் துறையில் மட்டும் 2011-ம் ஆண்டு முதல் இன்று வரை ஏறக்குறைய 86 விருதுகளைப் பெற்றுள்ளோம். போக்குவரத்துத் துறை, மின்சாரத்துறை, சுகாதாரத் துறை, உயர்கல்வித் துறை, சமூக நலத் துறை, வேளாண்மைத் துறை என பல்வேறு துறைகளிலும் தேசிய விருதுகளைப் பெற்றிருக்கின்றோம்.

“இந்தியா டுடே” என்ற பிரசித்தி பெற்ற ஆங்கில இதழ் இந்தியா முழுவதும் ஆய்வு செய்து, இந்தியாவிலேயே தமிழகம் தான் சட்டம்-ஒழுங்கில் சிறந்த மாநிலம் என்று தேர்ந்தெடுத்து, அதற்கான விருதினை துணை ஜனாதிபதியிட்ம் நான் பெற்றிருக்கின்றேன். இவ்வாறு அனைத்து வகையிலும் இன்றைக்கு நம்முடைய தமிழகம் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. தொழில் துறை, மின்சாரத் துறையில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. தடையில்லா மின்சாரத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவைகளெல்லாம் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் தான் புதிய, புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு வருகிறது.

அண்மையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ஏறக்குறைய 304 புதிய தொழில் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூபாய் 3 லட்சத்து 436 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதற்கு தொழில்முனைவோர்கள் முன்வந்திருக்கிறார்கள். அந்தப் பணிகள் அனைத்தும் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது, விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைக்கு, அனைத்து வகையிலும், தமிழகம், இந்தியாவில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கின்ற காரணத்தினால் மக்கள் எங்களுக்கு இந்த நல்ல ஆதரவைக் கொடுத்திருக்கிறார்கள்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த பொய்யான செய்திகள் மக்களிடம் எடுபடவில்லை. கடந்த முறை திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் முக்கியத்துவம் கொடுத்தீர்கள், மக்களும் நம்பிவிட்டார்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் 5 சவரனுக்குக் குறைவாக அடமானம் வைத்த அனைவருக்கும் நகைகளை மீட்டுத் தருவோம் என்று ஸ்டாலினும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஆசை வார்த்தை சொன்னார்கள். அதேபோல, மாதம் ஒன்றிற்கு ரூபாய் 6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூபாய் 72 ஆயிரம் கொடுப்போம் என்று சொன்னார்கள்.

இதுபோன்ற பொய்யான, தவறான செய்தியை மக்களிடம் சொல்லி, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்தார்கள். அதனை மக்கள் இப்பொழுது உணர்ந்து விட்டார்கள். ஆகவே, நாட்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்கின்ற கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி என்று உறுதிபட தீர்மானித்து அதனடிப்படையில் அருமையான வாக்கு வித்தியாசத்தில் எங்களை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் ஏறக்குறைய 44,900 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் ஏறக்குறைய 34,400 வாக்கு வித்தியாசத்திலும் இன்று எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்காக அரும்பாடுபட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சியில் பல்வேறு நிலைகளில் இருக்கின்ற நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கடுமையாக பாடுபட்டார்கள்.

அதேபோல், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, முழுமையாக தேர்தல் பணியாற்றினார்கள். அனைவரும் ஒருமித்த கருத்தோடு இந்த இடைத் தேர்தலை சந்தித்த காரணத்தினால் இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இதன் மூலம், இனி பொய்யான வாக்குறுதி அளிக்கக்கூடாது, எதைச் செய்ய முடியுமோ அதைத் தான் அறிவிக்க வேண்டுமென்ற எச்சரிக்கை மணியை மக்கள் அடித்திருக்கின்றார்கள்.

கேள்வி:- உள்ளாட்சித் தேர்தல் தேதி எப்பொழுது அறிவிக்கப்படும்?
பதில்: உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். அது தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதில் அரசு தலையிடாது. உச்சநீதிமன்றம் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் விரைவாக தேர்தலை நடத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:- உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடருமா?
பதில்:- தொடரும்.

கேள்வி:- டெங்கு காய்ச்சல் பரவி வருகிறதே…

பதில்:- டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசு நன்னீரில் தான் உற்பத்தியாவதாகத் தெரிவிக்கிறார்கள். நன்னீரில் உற்பத்தியாகின்ற கொசுவை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமென்றால், ஆங்காங்கே வீட்டைச் சுற்றி தேங்குகின்ற தண்ணீரை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து அப்புறப்படுத்தி, தங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்காமல் மக்களும் இதற்கு துணை நிற்க வேண்டும். தங்களின் பகுதியை தூய்மையாக வைத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் போன்றவற்றை தடுக்கலாம். அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பொதுமக்களும் தங்களது ஆதரவை தரவேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சல் வருகிறது. அவ்வளவு பெரிய மருத்துவ சிகிச்சை அளிக்கின்ற சிங்கப்பூரிலேயே கூட சுமார் 10,000 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்திருப்பதாக பத்திரிகை செய்திகளில் நாங்கள் பார்த்தோம். அதேபோல, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வந்திருக்கிறது. ஆகவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதை விரைவாக குணப்படுத்துவதற்கும் நான் லண்டன் சென்றபொழுது, அங்கே ஆய்வுக் கூடத்திற்கு சென்று நான் பார்வையிட்டேன்.

சுமார் 200 விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தக் கொசு எப்படி உற்பத்தியாகிறது? அந்த லார்வா-வை எப்படி அழிப்பது? கொசு வந்தபிறகு அதை எப்படி அழிப்பது? கொசு கடித்த பிறகு காய்ச்சல் வந்தால் அதை எப்படி குணப்படுத்துவது? இதற்கெல்லாம் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம், அது விரைவாக செயல்படுத்தப்படும். ஆகவே, மக்கள் விழிப்போடு இருந்து காய்ச்சல் வந்தவுடனேயே அருகிலிருக்கின்ற அரசு மருத்துவமனையில் தங்களை பரிசோதித்து உரிய சிகிச்சை பெற்றுக் கொண்டால் டெங்கு காய்ச்சலிலிருந்து விடுபடலாம்.

ஆனால், காய்ச்சல் வந்து நான்கைந்து நாட்கள் கழித்து சிகிச்சை பெறுகின்றபொழுதுதான் அவர்கள் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். ஆகவே, ஊடகத்தின் வாயிலாக பொதுமக்களை கேட்டுக் கொள்வது, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். குடும்பத்திலிருக்கின்ற யாருக்கு காய்ச்சல் வந்துவிட்டாலும், அருகிலிருக்கின்ற அரசு மருத்துவமனைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை செய்து உடனடியாக அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால், இந்தக் காய்ச்சலிலிருந்து விடுபடலாம்.

இங்கே வருகை தந்துள்ள ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பெருவாரியாக வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும் இந்த ஊடகத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, எங்களுக்காக பாடுபட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், இரவு, பகல் பாராமல் உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.