தற்போதைய செய்திகள்

படிப்படியாக குறைத்து 1000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்:-

படிப்படியாக குறைத்து தமிழகத்தில் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில், 1,333 பயனாளிகளுக்கு 10.6 கிலோ தங்கம் மற்றும் திருமண நிதி என மொத்தம் 10 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர்.வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதை முன்னிட்டு மாநில அரசு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களையும் முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இந்த மழைநீர் குடிமராமத்து செய்துள்ள ஏரிகள்-குளங்களில் சேகரம் ஆகி வருகின்றன.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என்பது 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக கழகத்திற்கு அமைந்துள்ளது. மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்பார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயம் செய்து மதுபானங்கள் விற்கப்படுவதில்லை. ரூ.350 கோடிக்கு மது விற்பனை இலக்கு வைத்துள்ளதாக நாளிதழ்களில் வந்துள்ள செய்தி தவறானதாகும். அதுபோன்ற இலக்கை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை நிர்ணயிக்கவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைப்படி படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாமக்கல் மருத்துவ கல்லூரி செயல்படும். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் 24 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.