தற்போதைய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் கழகம் சரித்திர வெற்றி பெறும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி

உள்ளாட்சித் தேர்தலில் கழகம் சரித்தி வெற்றி பெறும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதிபட தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கழக வேட்பாளர்களை ஆதரித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மற்றும் கருணாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஆவநத்தம், மூப்பன்பட்டி, இலுப்பையூரனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்பகுதி மக்களிடையே அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது-

வருகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழக வேட்பாளர்களை ஆதரித்து இரட்டைஇலை சின்னத்தில் வாக்குளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தல் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும். இதில் நீங்கள் அளிக்கின்ற ஆதரவு தான் எதிர்கால தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கப் போகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எண்ணிலடங்கா பல நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார். அம்மாவின் அற்புதமான திட்டங்களை இந்திய திருநாடே வெகுவாக பாராட்டி உள்ளது.

பல மாநிலங்கள் அம்மா கொண்டு வந்த திட்டங்களை பின்பற்றி செயல்படுத்துகின்றன. நமது கிராம பொருளாதாரம் வளர்ச்சிக்கு அம்மாவின் திட்டங்கள் தான் முக்கிய காரணமாகும். தமிழகத்தில் இப்பொழுது யாரும் பசிக்கிறது என்று சொல்வதில்லை. பசிக்கு சோறு கிடைக்கவில்லையே என்று யாரும் வருத்தப்படவில்லை. குடியிருக்க வீடு இல்லையே, உடுக்க உடை இல்லையே என்று யாரும் வேதனைப்படுவதில்லை. அத்தனையும் அம்மா அவர்கள் கொடுப்பதற்கு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.

அம்மா அவர்களின் பல்வேறு நலத்திட்டங்களை இப்போது முதலமைச்சராக இருக்கிற எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கொஞ்சம் கூட தொய்வின்றி மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து வருகிறார்கள். எனவே மேலும் பல நன்மைகளை பெறுவதற்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் கழகம் சரித்திர வெற்றி பெறும் என்பதை நீங்கள் நிருபித்து காட்ட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதகமும் ஏற்படாது. இதை வேண்டுமென்றே திசை திருப்பி மக்களை குழப்ப பார்க்கிறார்கள். மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்று கூறினார்.