சிறப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

கொரேனா வைரசால் எந்த ஒரு மக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் அரசின் நோக்கம். கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சட்டப்பேரவையில் அளித்த விளக்கம் வருமாறு:-

கடந்த 100 ஆண்டுகளில் இவ்வுலகம் சந்தித்திடாத இத்தகைய பெரும் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டிய இத்தருணத்தில், மக்களின் தொடர் ஆதரவும், நடைமுறை ஒழுக்கமும், சுய தனிமைப்படுத்தலும் உடனடி தேவை என்பதை மீண்டும் ஒருமுறை அன்புடன் வலியுறுத்துகிறேன்.

இன்றைக்கு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நான் ஏற்கனவே பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைகாட்சிகளின் வாயிலாகவும் தெரிவித்திருந்தேன். அதன்படி இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக மேலும் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையிலே, மாநிலத்திலே செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் 31.3.2020 வரை மூட வேண்டும் என்று நான் ஏற்கனவே உத்தரவு வழங்கி அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து இயங்கும். அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்படும் என்று அறிவுறுத்தப்பட்டு அத்தனையும் இன்றைக்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் 31.3.2020 வரை மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த ஒரு நிகழ்ச்சியும் திருமண மண்டபத்தில் நடத்தக் கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டதை தவிர புதிய நிகழ்ச்சிகள் எதுவும் 31.3.2020 வரை நடைபெறுவதை திருமண மண்டபத்தின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து சமூக நிகழ்வுகளிலும் மக்கள் குறைந்த அளவில் கூடினால் கொரோனா வைரஸ் பரவுவதை பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியதன் பேரில் அதையும் கடைபிடிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டு அதற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களும் கடைபிடித்து வருகிறார்கள். அதேபோல அதிகம் கூட்டம் கூடும் ஊர்வலங்கள், கோடைக்கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிக கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகள் நடத்த 31.3.2020 வரை அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து அதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. மேற்குறிப்பிட்டதை தவிர, பிற அவசியம் மற்றும் அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும். கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசு துறைகளும், பொது நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும், தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இன்றைக்கு தமிழகத்திலே கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முழு முயற்சியுடன் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதோடு, இன்றைக்கு விமான நிலையத்திலே பரிசோதனை 2,05,391 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. வீட்டு கண்காணிப்பிலே 9,424 பேர் இருக்கின்றார்கள். அரசு கண்காணிப்பிலே 198 பேர் இருக்கின்றார்கள். அரசு மருத்துவமனையிலே 54 பேர் இன்றைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு இன்றைக்கு நோய் தடுப்புப் பணிகளிலே முழு மூச்சுடன் ஈடுபட்டு அனைத்து வகையிலும் மருத்துவர்களை ஈடுபடுத்தி, இந்த நோய் தடுப்புப் பணிகளை தடுத்து வருகிறோம்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு முதற்கட்டமாக 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அதை கூடுதலாக்கி இப்பொழுது 500 கோடி ரூபாய் கொரோனா வைரஸ் தடுப்பு பணி மேற்கொள்வதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். அரசை பொறுத்தவரைக்கும், எங்களுடைய அரசு இன்றைக்கு எந்த ஒரு மக்களும் பாதிக்கப்பட கூடாது என்பது தான் எங்களது நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையிலே நாங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றோம்.

அதற்கு நம்முடைய தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து துறை அலுவலர்களும், உயர் அதிகாரிகளும், இரவு பகல் பாராமல் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி நோய் தடுப்புப் பணியிலே தங்களை முழு மனதோடு தங்களை ஈடுபடுத்தி, இன்றைக்கு தமிழகத்திலே கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசுக்கு துணை நிற்கின்றவர்களுக்கும் இந்த நேரத்திலே பாராட்டுதல்களையும், நன்றிகளையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு காவல்துறைக்கும் இந்த நேரத்திலே நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.