தமிழகம்

பயன்பாடற்ற கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற கெடு

சென்னை:-

பயன்பாடற்ற கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநகர் சி.நா.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவை செயல்படாமல் இருந்தால் அவை பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதில் குழந்தைகள், ஆடு, மாடு ஆகியவை விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை உடனடியாக மூட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 556 கூட்டு குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 9 மாநகராட்சிகள், 66 நகராட்சிகள், 347 பேரூராட்சிகள் மற்றும் 48,948 கிராம குடியிருப்புகள் மற்றும் 4.23 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சென்னை தவிர இதர பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 1906 மில்லியன் லிட்டர் விநியோகித்து வருகிறது.

மழை நீரை சேகரிக்கவும் மற்றும் நீராதாரத்தை கண்டறியவும் தமிழ்நாடு குடிநீர் வடகால் வாரியம் உன்னத நோக்கத்துடன் புவி- பௌதீக வரைபடம் ஒன்றை தயாரித்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட உரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மாவட்ட நிலையில் உள்ள நிர்வலாகப் பொறியாளர்கள் ஆகியோரிடம் வழங்கியுள்ளது.

மழைநீர் சேகரிப்புக்கென தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இணையதளம் (twadboardtn.gov.in), முகநூல் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. எனவே இது தொடர்பான உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் ஆகியவற்றை மேற்காணும் சமூக ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது நேரிடையாகவோ மாவட்டங்களிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்களை அணுகியோ, உரிய வழிகாட்டுதல்களையும், விளக்கங்களையும், ஆலோசனைகளையும் தாங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு குறும்படம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.நிலையான நீடித்த குடிநீர் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வாரிய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், சமூக பொறுப்புக் குழுமங்கள் ஆகியோர் இயங்காத மற்றும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றுவதற்கு எந்தவகையான தொழில்நுட்ப உதவிகளையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும் முதன்மையாக உதவி புரிவார்கள். மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மழைநீர் சேகரிப்பு இணையதளத்தில் மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றியும், காணொளி, விளக்கப்படம் மற்றும் தொடர்புெ காள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவை உள்ளன. அல்லது தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அவசர தகவல்கள் பெறும் மையத்தின் கை பேசி 9445802145 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.