தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி

தூத்துக்குடி:-

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் நடைபெற்ற மீட்புப் பணியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரின் மகள் தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா தம்பதியினர், நேற்று மாலை அவர்களது வீட்டில், நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தின் மீட்புப் பணிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது 3 வயது மகள் ரேவதி சஞ்சனா, நீண்ட நேரமாகக் காணாமல் போகவே பதற்றமடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.

இந்நிலையில் லிங்கேஸ்வரன் தனது வீட்டின் குளியலறையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியில் தலைகுப்புறக் கவிழ்ந்த நிலையில் மூச்சுப்பேச்சின்றி சஞ்சனா கிடப்பது தெரியவந்தது. இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சஞ்சனாவை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பினர். மருத்துவப் பரிசோதனையில் குழந்தை சஞ்சனா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.