தற்போதைய செய்திகள்

மாணவி அனிதா மரணத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் – சட்டசபையில் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு…

சென்னை:-

நீட் தேர்வு விவாதம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. ெகாண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர்கள் சுடச்சுட பதிலளித்தனர். அதைத்தொடர்ந்து சபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. நீட்தேர்வுக்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தான் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்க தி.மு.க. உறுப்பினர்கள் மறுத்து வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்து கூறியதாவது:-

நீட் தேர்வு தொடர்பாக 22.9.2017 அன்று குடியரசுத் தலைவரிடம் இருந்து வந்த கடிதத்தில் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெளிவாக இங்கு குறிப்பிட்டேன். இரண்டு மசோதாக்களும் எதற்காக, என்ன காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டது என விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. ஆகவே இந்தமசோதாவை மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஒரு இமெயிலை காட்டி மத்திய அரசின் வழக்கறிஞர் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த இமெயின் தொடர்பான கடிதம் கூட இதுவரை நமக்கு வரவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் எந்த சட்ட வல்லுனரையும் கலந்து ஆலோசித்து கருத்து கேட்கலாம். ஆகவே நான் சொன்னதில் மாறுபட்ட கருத்தோ, தவறோ இருந்தால் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். அதேபோல் நீங்களும் ராஜினாமா செய்யத் தயாரா? இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் சவால் விட்டார்.

அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டாலின் எழுந்து குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளிக்கையில், மசாதோ நிராகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தால் அதனை சட்டசபையில் தெரிவித்திருப்போம். ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கும், நிராகரிக்கப் பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது. எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. எனவே நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அம்மா அரசு வழக்கை சந்தித்து வருகிறது என்றார்.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்கையில், சட்டத்துறை அமைச்சர் சொன்னது போல் மத்திய அரசு மசோதா தொடர்பாக அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் கேட்டு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை சட்டசபையில் தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் கூறியிருக்கிறார். ஆனால் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேசியதும், நான் பதில் அளித்ததும் சட்டசபை குறிப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே இதுபோன்ற செயலில் எதிர்க்கட்சி தலைவர் ஈடுபடுகிறார் என்று கூறி விட்டு அப்போது நடந்த விவாதத்தின் விபரங்களை அமைச்சர் ஆதாரத்துடன் விளக்கி காட்டினார்.

உடனே எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசும்போது, பலமுறை இது தொடர்பாக விளக்கம் கேட்டு அமைச்சர்கள் கூறிய கருத்துகள் ஏற்புடையதாக இல்லாததால் அதனை கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசும்போது, நீட் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த அறிவிப்பு ஆணை தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமாக உள்ளது. இது தொடர்பான எல்லா விஷயங்களும் ஆவணமாக உள்ளது. இதையெல்லாம் யாராலும் மறுக்க முடியாது. இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு விவாதம் நடந்தபோது சுகாதாரத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். தமிழக மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு பெற பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நானும் பிரதமரை பலமுறை நேரில் சந்தித்து கடிதம் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி அழுத்தம் ெகாடுத்து வருகிறேன் என்று குறிப்பிட்டார்.

அப்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி பேசிய கருத்துக்கு அமைச்சர்களும், கழக உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது உறுப்பினர் ராமசாமி பேசிய பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே முதலமைச்சர் குறுக்கிட்டு பேசுகையில், யார் ஜாமீனில் வெளிவந்து வழக்கை சந்திக்காமல் வாய்தா பெற்று வருகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு வருவதற்கு நீங்கள் தான் காரணம். இவ்வளவு பிரச்சினைக்கும் காங்கிரஸ் தான் காரணம். இதுவும் மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி தலைவர் பதட்டமோ, டென்சனோ அடைய வேண்டாம். இந்த விஷயத்தை பேச வேண்டாம் என்று தான் நான் நினைத்தேன். நீட் தேர்வு தொடர்பாக அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த விவகாரம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு காங்கிரஸ் தான் காரணம் என நான் குற்றம் சாட்டுகிறேன். அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியும், வேலை வழங்கியதும் எங்கள் அரசு தான். நீட் தேர்வை எதிர்த்து அனிதா உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஆனால் நீட் தேர்வு வழக்கில் ஆஜரான நளினி சிதம்பரம் இனி நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என பேட்டி அளித்தார். நளினி சிதம்பரம் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் சிதம்பரத்தின் மனைவி என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகத்தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா மரணத்திற்கு காரணம் நீங்கள் (காங்கிரஸ்) தான்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். அதனை ஏற்றுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் நான் தவறு செய்திருந்தால் அ தற்கு முழு பொறுப்பேற்கிறேன். இந்த சபையில் 8.7.2019 அன்று நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் இது பற்றி தெளிவாக பேசியிருக்கிறேன். இது அவை குறிப்பில் இடம் பெற்றது. ஆகவே எதிர்க்கட்சி தலைவரின் கனவு ஒருபோதும் பலிக்காது. 5 ஆண்டு இந்த ஆட்சி முழுமை செய்து அடுத்த முறையும் அம்மாவின் ஆட்சி தான் தமிழகத்தில் தொடரும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.