சிறப்பு செய்திகள்

சுஜித் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிருக்கு போராடி மரணமடைந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் குடும்பத்துக்கு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாயும், கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற இரண்டு வயது குழந்தையை மீட்க தமிழக அரசு கடந்த 4 நாட்களாக கடுமையாக போராடியது. ஆனால் 2 வயது குழந்தை என்பதால் அவனை உயிருடன் மீட்க முடியாமல் போய் விட்டது.

தமிழகத்தையே உலுக்கிய, மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. சுஜித்தை காப்பாற்ற தமிழக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. தீயணைப்பு படை வீரர்கள், என்.எல்.சி., எல்.அன்டி, அண்ணா பல்கலைக்கழகம், ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவு, பகல் பாராது சிறுவனை மீட்பதற்காக போராடினார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் கூட இரண்டு வயது குழந்தை என்பதால் அவனை உயிருடன் மீட்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கடந்த நான்கு நாட்களாக குழந்தைகயை மீட்கும் முயற்சியில் அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்ட நிலையில் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி முதலியோர் சம்பவ இடத்திலேயே இருந்து மீட்பு பணிகளை கண்காணித்து வந்தனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நேரில் சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தி குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். முதலமைச்சர் அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு அவ்வப்போது நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் முதலமைச்சரை தொடர்பு கொண்டு மீட்பு பணி பற்றியும், அங்குள்ள நிலைமை பற்றியும் கேட்டறிறந்தார்.

இந்நிலையில் அதிகாலை குழந்தையை உயிருடன் மீட்க முடியாமல் போய் விட்டது. மரணமடைந்த குழந்தை சுஜித்தை அமைச்சர்களும், அதிகாரிகளும் ெபற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அமைச்சர்கள் முதலில் குழந்தைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தகவல் அறிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று மாலை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நடுக்காட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று சுஜித் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் குழந்தையின் பெற்றோர்களுக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

சுஜித்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாயும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இந்நிகழ்வின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் என்.ஆர்.சிவபதி ஆகியோரும் உடனிருந்தனர்.

சுஜித் திருவுருவ படத்திற்கு சபாநாயகர் ப.தனபால் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.