தமிழகம்

பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனே மூட வேண்டும் – பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை:-

பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆள்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுஜித் மரணத்தை போன்று அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலுள்ள பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கு என ஆய்வு அலுவலர்களும் பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் மேலும் அறிவுரைகள்வழங்கப்படுகின்றன.

எனவே, பள்ளி வளாகத்தில் கட்டட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். அந்த இடங்களை சுற்றி பாதுகாப்பானதடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள திறந்த நிலை கிணறுகள், நீர்நிலை தொட்டிகள், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனே அகற்றிட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்களது மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அவை பாதுகாப்பாக உள்ளனவா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், கழிவு நீர் தொட்டிகள், கிணறுகள், நீர் சேமிப்பு தொட்டிகள் போன்றவற்றை நிரந்தரமாக மூடப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மூடப்படாதஆழ்துளை கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடங்களில் சிறப்பு குறியிட்டு, தனியாக அடையாளப்படுத்த வேண்டும்.

அவற்றை தரைமட்டத்திலிருந்து உயர்த்தி பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின் அழுத்த மின் கம்பங்கள் மற்றும் நொறுங்கக் கூடிய மின் கம்பிகள் இருப்பின் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.பள்ளி மாணவர்களுக்கு ஆழ்துளைக் கிணறுகள், கழிவு நீர் தொட்டிகள், ஏரி, குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.