ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 2 இடங்களில் மட்டுமே காய்கறி, பழக்கடைகள் நடத்த அனுமதி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் புதிய பேருந்து நிலைய வளாகம், ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய இரு இடங்களில் மட்டுமே காய்கறிகள், பழக்கடைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம், நகராட்சிப் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டார்.

அந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்த்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான பால், உணவுப் பொருட்கள், காய்கறிகள், மருந்து பொருட்கள் சிரமமின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்கிச் செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பிய 4,125 நபர்கள் அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அவர்களின் வீடுகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் வீட்டிலிருந்து வெளியே செல்லாமலிருக்க காவல், சுகாதாரம், வருவாய் துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், நோய் தொற்றை முற்றிலுமாக தவிர்த்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் முக்கிய வீதிகள், பொது இடங்களில் 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரில் கலந்த கிருமி நாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்பட்டு சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்த்திட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகம், ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைக் கடைகளை ஒருங்கிணைத்து அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

28.03.2020 முதல் ராமநாதபுரம் நகரில் உள்ள பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு இடங்களில் மட்டுமே காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க முடியும். இவ்விரு இடங்கள் தவிர்த்து பிற இடங்களில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தேவைக்கேற்ப பொது இடங்கள் தேர்வு செய்யப்பட்டு காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைக் கடைகளை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.