தற்போதைய செய்திகள்

ஜனவரி 4-ந்தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாருர்

ஜனவரி 4-ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். பிரச்சார கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.காமராஜ், உள்ளாட்சித் தேர்தலில் கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக மக்களுக்கு அம்மா அவர்களின் தொடங்கி திட்டங்களை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறார். பொங்கல் பரிசு ஜனவரி 4-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. அத்துடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும்.

இப்படியெல்லாம் மக்களுக்கு நன்மை செய்வதை தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் விரும்பவில்லை. அவர்களுக்கு கழக அரசின் நல்ல திட்டங்களை பார்த்து பொறாமை ஏற்படுகிறது. அதனால் மக்களுக்க நன்மை செய்வதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டு சதி செய்கிறார்கள். மக்களிடையே கழக அரசுக்கு ஆதரவு பெருகி கொண்டு வருவதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுக்க முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால் அவர்களின் முயற்சி கானல் நீராகி விட்டது.

இப்பொழுது குடியுரிமை சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டி விட்டு தமிழ்நாட்டுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இப்போது சீராக இருக்கிறது. இதைகுலைக்க வேண்டும் என்று தான் தி.மு.க. தலைவரின் முக்கிய நோக்கமாகும்.

அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்து விடக்கூடாது. இந்த போராட்டத்தின் வாயிலாக அவர்கள் வன்முறையை தூண்ட பார்க்கிறார்கள். தூண்டி விடவும் செய்வார்கள். இதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. போன்ற தீய சக்திகளுக்கு பாடம் புகட்டும் வகையில் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.