மற்றவை

தருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.

தருமபுரி நான்கு ரோடு, பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் காவல்துறையின் வஜ்ரா வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல ட்ரோன் கேமரா (ஹெலிகேம்) மூலம் நகர் பகுதியில் வெளியில் யாரேனும் சுற்றி திரிகிறார்களா என கண்காணிக்கப்பட்டது. இந்த பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், ஆகியோர் பார்வையிட்டனர்

பின்னர் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்த 396 பேரையும் அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தபட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல், இருமல், உள்ளிட்ட கொரோனாவிற்கான அறிகுறி தருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட இல்லை.

இதேபோல பொதுமக்களுக்கு தேவையான மளிகை, காய்கறி, பழங்கள், இறைச்சி, மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்படு செய்யபட்டுள்ளது. மாவட்டம் முழுவதிலும் உள்ள மருந்து கடைகள் தனியார் மருத்துவமனைகள் சுகாதாரத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலி மருத்துவர்கள் யாராவது மருத்துவம் செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா நிவாரண நடவடிக்கையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூபாய் 1000 மற்றும் ரேஷன் உணவுப் பொருட்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வருகின்ற ஏப்ரல் 2-ம்தேதி முதல் சுழற்சிமுறையில் பயனாளிகளுக்கு அலுவலர்கள் மூலம் வீடுகளுக்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்தார்.