சிறப்பு செய்திகள்

திருச்சி அடுக்கு காகித அட்டை ஆலையில் முதல்கட்ட விரிவாக்க பணிகள் தொடக்கம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மொண்டிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் அடுக்கு காகித அட்டை ஆலையின் விரிவாக்க திட்டத்தின் முதல்கட்டமாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், மொண்டிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் அடுக்கு காகித அட்டை ஆலையின் விரிவாக்க திட்டத்தின் முதல்கட்டமாக, 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட வன்மரக்கூழ் தயாரிக்கும் பிரிவு, இரசாயன மீட்பு கொதிகலன் பிரிவு மற்றும் 20 மெகா வாட் திறன் கொண்ட மின்னாக்கி நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  அடிக்கல் நாட்டினார்கள்.

இந்த ஆலை விரிவாக்க திட்டம் மொத்தம் 2,520 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2018-19ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 18 கோடியே 33 லட்சத்து 36 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் நேற்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் `மை ஸ்டாம்ப்’ என்ற தபால் தலையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சு.சிவசண்முகராஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.