தமிழகம்

அரியலூர் ரூ.809 கோடியில் சிமெண்ட் ஆலை விரிவாக்கம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூரில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன வளாகத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் வகையில் 809 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட சிமெண்ட் தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2011-12-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் ஆலையின் உற்பத்தி திறனை 5 லட்சம் டன்னிலிருந்து 15 லட்சம் டன்னாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அதன்படி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 29.1.2016 அன்று அரியலூர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன வளாகத்தில் சிமெண்ட் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

திருவாளர்கள் டெவலப்மெண்ட் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட், கொல்கத்தா என்ற நிறுவனத்தை திட்ட மேலாண்மை ஆலோசகராகவும், கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள திருவாளர்கள் லார்சன் அண்டு டியூப்ரோ என்ற நிறுவனத்தை இ.பி.சி. ஒப்பந்ததாரராகவும் கொண்டு ஆலை நிறுவும் பணி துவக்கப்பட்டது.

அதன்படி, அரியலூர், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன வளாகத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இப்புதிய விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்களை மேற்கொண்டும், சுற்றுச்சூழல் இயந்திரங்களை நிறுவியும், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிகளை முழுமையாக பின்பற்றியும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில், 2020-21-ம் ஆண்டு முதல் ஆண்டொன்றிற்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன்மூலம் டான்செம் நிறுவனத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தி திறன் தற்போது உள்ள 7 லட்சம் டன்னிலிருந்து 17 லட்சம் டன்னாக உயரும். இந்த ஆலை 809 கோடியே 9 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 250 நபர்கள் நேரடியாகவும் 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக, தேர்வு செய்யப்பட்ட 3 இயந்திர பொறியியல் தொழில்நுட்ப நிர்வாகிகள், 4 மத்திய கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர்கள், 2 வேதியியலாளர்கள், 1 எக்ஸ்ரே ஆய்வாளர், 1 கணக்காளர், 2 வாகன ஓட்டுநர்கள் ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் அரியலூர் சிமெண்ட் ஆலை ஆகியவற்றிற்கு சிறந்த தர மேலாண்மை முறைக்காக இந்திய தர நிர்ணய அமைப்பால் வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ. – 9001:2015 சான்றிதழ்களை நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, அரசு தலைமைக் கொறடா .எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சு.சிவசண்முகராஜா, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் டி.மோகன்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.