சிறப்பு செய்திகள்

தமிழர்கள் நலன் காக்க இடைவிடாது உழைப்போம் – துணை முதலமைச்சர் சபதம்

சென்னை

தமிழர்கள் நலன் காக்க இடைவிடாது உழைப்போம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சபதம் மேற்கொண்டார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:- 

தமிழ் என்னும் அமுதை, தாங்கி நிற்கும் தங்கக் குடமாம் தமிழகம், தமிழ் மொழி பேசும் நிலப்பகுதிகளை தனதாக்கி, இன்றைய எல்லைகளைத் தன் உரிமையாகக் கொண்டு, உருவான திருநாளைக் கொண்டாடும், “தமிழ் நாடு நாள்” என்னும் இத் தனிப்பெரும் விழாவுக்கு, தலைமை ஏற்கின்ற நல்வாய்ப்பை எனக்களித்த நல் உள்ளங்களுக்கு, எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடல் சூழ்ந்த பூமியிலே காலத்தால் மூத்த மொழி..!
வள்ளுவனின் குறளாக வையகத்தில் பூத்த மொழி..!

சரித்திர இலக்கியங்களை சங்கத்தில் கண்ட மொழி..!
ஐம்பெரும் காப்பியங்களை அணிகலனாய்க் கொண்ட மொழி..!

அதுதான், நமது மூச்சாக, பேச்சாக, உயிராக, உயிரோடு கலந்த உணர்வாகத் திகழும்
அன்னைத் தமிழ் மொழி..! மத்திய நிதியமைச்சர் , தனது பட்ஜெட் உரையில், ஒரு அரசு எப்படி வரி வசூல் செய்ய வேண்டும் என்பதை, புறநானூற்றுப் பாடலை கொண்டு எடுத்துக்காட்டுகின்ற அளவிற்கு, பொருள் பொதிந்த மொழியாகவும், அதற்கும் மேலாக, ஒட்டுமொத்த இந்திய மக்களின் நன்மதிப்பை பெற்று திகழும், பாரத பிரதமர் மோடி ஜி, ஐக்கிய நாடுகள் அவையிலேயே, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று, புறநானூற்று வைர வரிகளை மேற்கோள் காட்டுகின்ற அளவுக்கு, வளம் செறிந்த மொழியாகவும் , பெருமையுடன் திகழ்வது நம் தமிழ்மொழி!

இப்படி பழைமைக்குப் பழைமையாய்,
புதுமைக்குப் புதுமையாய் திகழும் தமிழ் மொழியைத்
தங்கள் தாய் மொழியாய் பேசும் மக்கள்,
பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, சிறந்திருக்கும் நிலம் தான்,
தமிழ் மாநிலமாகிய தமிழ்நாடு!

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்”
என்று பாடிய மகாகவி பாரதியார்,

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”
என்றுரைத்த பெருமை கொண்ட நிலம்தான்,
தமிழ் மாநிலமாகிய தமிழ் நாடு.

தமிழ்நாட்டின் நிலப்பகுதி, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரி முனை வரை கொண்டிருந்தது என்பதை, தொல்காப்பியம்,“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று எடுத்துக் கூறுகிறது.

எனினும் நாடு சுதந்திரம் பெற்று, ஒரே இந்தியாவாக உருவெடுத்த நேரத்தில், இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாடு காக்கப்பட, “வேற்றுமையில் ஒற்றுமை” காணப்பட வேண்டும் என்னும் கருத்து மேலோங்கி, மொழி வாரியாக மாநிலங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்றது.

இதன்படி, விடுதலை பெற்ற இந்தியாவில், மாநிலங்கள் வடிவெடுத்து உருப்பெற்ற போது, தமிழ் மொழி பேசும் நிலப்பகுதிகள் எந்த வகையிலும் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து விடக் கூடாது என்று எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய பெருமகன், சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படும், ம.பொ.சிவஞானம் ஆவார்.இவருடன், தளபதி விநாயகம், மங்கலங் கிழார் முதலான பெருமக்களும் வெகுண்டெழுந்து, போராடியதன் பயனாகத்தான், இன்றைய தமிழ் நாட்டின் வடக்கெல்லைப் பகுதிகள் நமதாகத் திகழ்கின்றன.

தமிழகத்தின் தெற்கு எல்லைப் பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சார்ந்த குமரித் தந்தை என்று போற்றப்படும் மார்ஷல் நேசமணியும், நத்தானியல் மணி, காந்திராமன், ராமசுப்பு ஐயர் ஆகியோரும், தமிழ் பேசும் நிலப்பகுதிகளை எக்காரணம் கொண்டும் விட்டுவிட மாட்டோம் என அதனைத் தங்கள் உயிர்ப் பிரச்சினையாக எண்ணிப் போராடினார்கள்.

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதிகளை, தமிழ்நாட்டோடு இணைப்பதற்காக நடந்த போராட்டத்தின்போது 12 பேருக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதன் விளைவாகத்தான் கன்னியாகுமரி இன்று தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்றிப் பெருக்குடன் தங்கள் இதயத்தில் ஏந்தி நிற்கிறார்கள்,

இவ்வாறு தமிழ்நாடு, இன்றைய எல்லைகளை தனதாக்கிக் கொள்ள, தங்களது இன்னுயிரைத் துச்சமாக எண்ணிப் போராடிய எல்லைக் காவலர்களை, நமது எல்லைக்காகவும் மொழிக்காகவும் உழைத்த வீரப் பெருமக்களை, போற்றிப் பாராட்டுகின்ற திருநாளாக, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, இந்த இனிய நாளை “தமிழ் நாடு நாள்” என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் எல்லைப் பகுதிகளைக் காக்க, போராடி வெற்றி கண்ட பெருமக்களின் வழி நின்று, தமிழகம் எங்கும், எதிலும், சிறந்திட வேண்டும் என்னும் அவர்களது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் பாடுபட்ட, முப்பெரும் தலைவர்களை நாம் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து போற்றிடக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழோடு பிறந்து, தமிழோடு வளர்ந்து, தமிழால் வாழுகின்ற மக்களுக்கு உரிமையான நிலம், தமிழின் பெயராலே அழைக்கப்படாதிருந்த இரண்டாயிரம் ஆண்டு காலத்துப் பெருங்குறையை, “தமிழ்நாடு” என்று, தமிழகத்திற்கு பெயர் சூட்டித் தீர்த்து வைத்து, அதனை சட்டசபையில் அறிவித்து, தமிழர்களாகிய நம் மொழி உணர்வுக்குப் புத்துயிர் ஊட்டியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா!

சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டி, காலமெல்லாம் தமிழுக்கு வளம் சேர்க்க பேரறிஞர் அண்ணா அவர்கள் வகை செய்தார்!அதன்பிறகு, பேரறிஞர் அண்ணாவின் வழியில், மழை பொழிவதற்காகப் பிறந்த மேகம் போல், குளிர்ஒளி கொடுப்பதற்கே எழுந்த நிலவு போல், தான் உழைத்து ஈட்டிய பொருளை எல்லாம் ஏழை எளியோருக்கு கொடுப்பதற்காகவே பிறந்த பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., பொங்கிடும் தமிழ் உணர்வோடு, அரிய செயல்திட்டங்கள் வகுத்து, செயல்படுத்தி, தமிழ்மொழியை மேலும் வளப்படுத்தினார்.

* தமிழ்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களிலும், தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என அரசாணை பிறப்பித்தார்.
* தமிழுக்கென தனி பல்கலைக் கழகம் கண்டார்
* பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் சிந்தனைக்கு செயல் வடிவம் தந்து, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில், நமது உள்ளம் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் என்று தன் உள்ளம் நிறைந்த உணர்வோடு, பல்வேறு சாதனைத் திட்டங்களையெல்லாம் செயல்படுத்தினார். உலகப் பொது மறையாம் திருக்குறளைச் சீன மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்த்து, திருக்குறளின் அரிய கருத்துகளை உலகெங்கும் பரவச் செய்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.

அதேபோல் மகாகவி பாரதியார் மற்றும் பாவேந்தர் பாரதிதாசனின் தெரிவுசெய்த பாடல்களைச் சீன மொழியிலும் அரபு மொழியிலும் மொழிபெயர்ப்புச் செய்ய ஆணையிட்டவரும் அம்மா அவர்கள் தான். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுகிற ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது, தமிழினக் காவல் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசே ஆகும்.

நலிவுற்றிருந்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “தமிழ்நாடு” என்னும் வடிவக் கட்டடம் கட்டுவதற்காகவும், சிறந்த நூல்களை வெளியிடுவதற்காகவும், நிதி உதவிகள் செய்து மீட்டெடுத்த பெருமையும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும். சென்னை தரமணியில் இருக்கிற, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புதிய நிருவாகக் கட்டடத்தையும், தொல்காப்பியர் ஆய்விருக்கையையும், சுவடிகள் பாதுகாப்பு மையத்தையும் தந்தவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.

இவ்வாறு முப்பெரும் தலைவர்கள் தமிழ்ப் பணியை மேற்கொண்டதோடு மட்டுமின்றி, தமிழகம் மேலோங்கவும், தமிழக மக்கள் வாழ்வில் வளம் பெற்றிடவும், பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இந்திய மண்ணில் தமிழகத்தை மேலோங்கச் செய்திட வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் மக்கள் பணியாற்றியதன் பயனாக, தமிழ்நாடு இன்று பிற மாநிலங்களைவிட உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

“முன்கை நீண்டால் முழங்கை நீளும்” என்றும்
“முன்ஏர் செல்லும் வழியிலே பின்ஏர் செல்லும்” என்றும்
நம் முன்னோர் ஏற்படுத்திய பழமொழிகளுக்கு ஏற்ப,

பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை, எப்படிப் புரட்சித்தலைவர் தன்னுடைய சாதனைத் திட்டங்களால் நிறைவேற்றிச் சரித்திரம் படைத்தாரோ, புரட்சித்தலைவர் நடைமுறைப்படுத்திய திட்டங்களை யெல்லாம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படியெல்லாம் காத்து வளர்த்து பல புதிய வளமார்ந்த திட்டங்களைத் தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தந்தார்களோ, அதே வழியில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைந்திருக்கும் அம்மா அவர்களின் அரசும், தமிழுக்காகத் திட்டங்களை தீட்டி அவற்றை செயல்படுத்துவதில் முனைப்புடன் கடமையாற்றிக் கொண்டிருக்கிறது.
இன்று தமிழ்நாடு நாள் விழாவை சிறப்புடன் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனை மனதாரப் பாராட்டுகிறேன்.

தமிழகத்தின் பழம் பெருமைகளை இந்த உலகிற்கு வெளிப்படுத்திக்காட்ட பாண்டியராஜன் கீழடி அகழாய்வுப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.இந்த ஆய்வின் மூலம் தமிழர்களின் நாகரிகம் எந்த அளவிற்கு பழைமை வாய்ந்தது என்றும், தமிழ் மக்கள் எந்த அளவிற்கு பண்பாட்டில் சிறந்து உலகின் மூத்த குடிமக்களாக விளங்கினார்கள் என்பதையும் உலகம் உணர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இதற்காக அமைச்சர் பாண்டியராஜனை உளமார வாழ்த்துகிறேன்.

தமிழக மக்களுக்காகப் பணியாற்றுவதையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த அம்மா அவர்களின் வழியில் அன்றும், இன்றும், என்றும், மக்கள் நலப்பணியில் பின்வாங்காது அம்மா அவர்களின் விசுவாசத் தொண்டர்களாகிய நாங்கள் களப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மக்கள் நலப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் முன்னேற்றம் ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வளமார்ந்த தமிழ்ப் பணிகளையும் தமிழ் மக்களுக்கான நலப் பணிகளையும் கடமையுணர்வோடு பணியாற்றுவோம். தமிழர் தம் நலம் காக்க என்றும் உழைப்போம் என்று தெரிவித்து தமிழகத்தின் எல்லை காக்கப் போராடிய மாவீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை உரித்தாக்கி, எனது உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.