சிறப்பு செய்திகள்

சிவகங்கை கொந்தகையில் ரூ.12.21 கோடியில் புதிய உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

சிவகங்கை அருகே கொந்தகை கிராமத்தில் ரூ.12.21 கோடியில் புதிய உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நாள் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை வருமாறு:-

தற்போது இந்தியாவிலும், உலக அரங்கிலும் பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. ஏன் அவ்வாறு கொண்டாடப்படுகின்றன என எண்ணிப் பார்க்கும்போது, ஆன்றோர்கள், சான்றோர்கள் பலரின் தோற்றத்தையும், மறைவையும் நினைவு கூரவும், வரலாற்றின் போக்கினை மடைமாற்றி, தன் பக்கம் இட்டுச் சென்ற பல்வேறு வரலாற்று புருஷர்களின் நினைவைப் போற்றவும், இளைய தலைமுறையினருக்கு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

தற்போது உள்ள தமிழ்நாட்டின் எல்லைகளை நிர்ணயம் செய்ய அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், தளபதி விநாயகம், மன்கலங்கிழார், மார்ஷல் நேசமணி, திருவலங்காடு திருமலைப்பிள்ளை, திருத்தணி ரஷீத், பி.எஸ்.மணி, சாம் நத்தாணியேல், தோழர் ஜீவா உள்ளிட்ட பலரது போராட்ட வரலாற்றை நினைவுகூரவும், போற்றவும் “தமிழ்நாடு நாள்” விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்.

பரந்து விரிந்த பண்டைய தமிழ்நாட்டை பல அரச வம்சங்கள் ஆண்டு வந்தன. அவர்களில் முதன்மையாக குறிப்பிடத்தக்கவர்கள் சேரர், சோழர், பாண்டியர், வேளிர்கள், பல்லவர், சாளுக்கியர், விஜயநகரத்தார், நாயக்கர் என்போர் ஆவர். தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் கிரேக்க, ரோமானிய அரசுகளுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்தனர் என்பதை வரலாறு நமக்குக் கூறுகின்றது.

தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் சிலர் இமயமலை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்று, தங்கள் வெற்றியைக் குறிக்க இமயமலையில் தங்கள் கொடியை பறக்க விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழர்கள் கடல் கடந்தும், கிழக்காசிய நாடுகள் பலவற்றை வென்றும் தங்கள் ஆட்சியை நிறுவினர். கடலின் நீரோட்டம் அறிந்து, கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் உலகுக்கே முன்னோடியாகத் திகழ்ந்து, நாடுகள் பல சென்று, தமிழர் பண்பாடு, பழக்க வழக்கங்களைப் பரப்பி, வணிகம் செய்து வெற்றி வாகை சூடினர். சோழர் காலத்தில் ஒட்டுமொத்த கிழக்குக் கடற்கரைச் சமவெளி அனைத்திலும், புலிக்கொடி பறந்ததால்தான் இன்றும் இச்சமவெளி சோழ மண்டல கடற்கரை பகுதி என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் வரலாறும், தமிழ் மக்களின் பண்பாடும், மிகவும் தொன்மை வாய்ந்தவை. பூமியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில் தான் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல் ஆராய்ச்சிகளால் விளக்கியுள்ளார். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகம் என்று, வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரி வரை தமிழ்நாடு சீரோடும் சிறப்போடும் விளங்கியதை வரையறுத்துச் சொல்கிறார்.

நம் வரலாற்றின் தொன்மையை இதுவரை இலக்கிய சான்றுகள் கொண்டு நாம் விளக்கியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தேனி மாவட்டம் புள்ளிமான் கோம்பையிலும், பழநி அருகே உள்ள பொருந்தலிலும் நடுகற்கள் மற்றும் மண்பாண்ட சான்றுகள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தற்போது, சிவகங்கை மாவட்டம், கீழடி ஆய்வுகள் வைகை நதிக்கரை நாகரீகத்தை உலகுக்கு பறைசாற்றுகின்றன. இதன் மூலம் தமிழரின் தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்துக்கள், அசோகர் காலத்து பிராமி எழுத்துக்களுக்கும் காலத்தால் முந்தியவை என்பதை உறுதி செய்கின்றன. இந்திய துணைக் கண்டத்தில் முதல் எழுத்தறிவு பெற்ற சமூகம் தமிழ்ச் சமூகம் தான் என்பது நிரூபணமாகி இருக்கிறது.

1639-ல் ஆங்கிலேயர்கள் மதராசில் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது. தென்னிந்தியாவில் சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளை பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு அவர்களின் மேல் ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தைச் செலுத்த, மெல்ல, மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளாவின் சில பகுதிகள் இணைந்து “பிரசிடென்சி ஆப் மெட்ராஸ்” என்று ஆங்கிலத்திலும், “மதராஸ் மாகாணம்” என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது. நமது நாடு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் விடுதலையடைந்த பின்னர், 1956-ம் ஆண்டு மாநில எல்லைகளை மறு வரையறை சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உள்ளடக்கிய, ‘மதராஸ் மாநிலம்’ உருவாக்கப்பட்டது.
அவ்வாறு உருவாக்கப்பட்ட மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தி தனது இன்னுயிரை ஈந்து இக்கோரிக்கைக்கு வித்திட்டார்.

தாய் தமிழ் நிலத்துக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் கேட்டு வலியுறுத்தி ‘தமிழ்நாடு’ என்று என் மாநிலத்தை அழையுங்கள் எனும் பொருளை மையப்படுத்தி 1963-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் பல ஆதாரங்களை எடுத்து வைத்து உரையாற்றினார். சக உறுப்பினர்கள் இவரது வாதத் திறமையை வெகுவாகப் பாராட்டினார்கள்.
அவர் பேசுகையில், சங்கத் தமிழ்ப் பாடல்களில் தமிழ்நாடு என்ற சொல் இடம் பெற்றிருப்பது குறித்து பல மேற்கோள்களைக் காட்டினார்.

பரிபாடல் நூலில் “தண்டமிழ் வேலி தமிழ்நாடு அகமெல்லாம்” என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்குப் பொருள் “மூன்று பக்கங்களும் கடல் சூழ்ந்த இனிய தமிழ்நாடு” என்பதாகும்.1800 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட ‘பதிற்றுப்பத்து’ பாடலில் “தமிழ் கடல் வேலி தமிழகம்” என்றுள்ளது. அதாவது, கடலையே எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு என்பது இதன் பொருள். தமிழ்நாட்டை சிலப்பதிகாரத்தில் “தென் தமிழ் நன்னாடு” என்று வர்ணித்துள்ளனர். இதன் பொருள், “நல்ல தமிழ்நாடு” என்பதாகும். மணிமேகலையில் “சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டை ‘சம்புத் தீவு’ என்று மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பெயர் மாற்றத்தினால் உங்களுக்கு என்ன லாபம் என மாநிலங்களவையில் வினா எழுப்பப்பட்டது. அதற்கு பேரறிஞர் அண்ணா உணர்வுபூர்வமாக நாங்கள் திருப்தி அடைவோம். பழந்தமிழ்ச் சொல் ஒன்று கோடிக்கணக்கான மக்களின் நாவிலும், மனங்களிலும் இடம் பெறுகிறது என்று மகிழ்ச்சி அடையலாம். பெயர் மாற்றம் என்ற சிறிய செயலுக்கு இது போதுமான மிகப் பெரிய ஈடு இல்லையா? என்றார்.

மேலும் அவர் பேசுகையில் மெட்ராஸ் என்று தொடர்வதில் தவறில்லை என்றாலும், தமிழ்நாடு என்ற பெயர் தரும் உணர்வுக்காக, தனித்தன்மைக்காக அந்த வார்த்தையில் உள்ள தொன்மைக்காக மாற்றம் கோருகிறோம். மெட்ராஸ் என்ற பெயர் நீடித்தால் அது மாநிலத்தை குறிக்கிறதா, தலைநகரத்தை குறிக்கிறதா என்ற சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். தமிழ்நாடு என்று மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால், தமிழ்நாடு மாநிலம், மெட்ராஸ் அதன் தலைநகரம் என்று தெளிவாகி குழப்பங்கள் நீங்கிவிடும் என்று ஆணித்தரமாக தனது வாதத்தை எடுத்துரைத்தார்.

பின்னர், 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், தான் ஏற்கனவே எடுத்துரைத்த வாதங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், 1967-ம் ஆண்டு ஜுலை மாதம் 18-ம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் நாள் தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. பேரறிஞர் அண்ணா தான் நினைத்ததை சாதித்துக் காட்டினார் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் நாள் வரலாற்று சிறப்புமிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன் விழா ஆண்டு நாள் மிகச் சிறப்பாக அம்மாவின் அரசால் கொண்டாடப்பட்டது.

அக்காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களும், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் நன்கு வளர்த்தார்கள். தமிழ்ப் புலவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு, அவர்களின் திறமைக்கேற்ற வெகுமதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் தமிழ் மொழியில் நிறைய நூல்கள் வெளி வந்தன. மொழியின் வளம் பாதுகாக்கப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக முதல், இடை மற்றும் கடை என்ற மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன. தமிழ் புலவர்களால் இயற்றப்படும் நூல்கள் இந்த சங்கங்களில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சைவ சமயக் குரவர்களால் இயற்றப்பட்ட தேவாரம், திருவாசகம், ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற நூல்கள் தமிழ் மொழியின் ஆன்மிக வளத்தை உலகுக்கு பறைசாற்றுகின்றன.தமிழ் மொழி இலக்கிய வளம் மிக்கது. இம்மொழியில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் நூற்றுக்கணக்கான நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உன்னத கருத்தை உலகிற்கு நல்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகப் பொதுமறையாக போற்றப்படுகிறது.புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் இயற்றிய “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பாடல் ஐக்கிய நாடுகள் சபையில் ஒலித்தது. இதுவன்றி இந்தப் பாடல் இன்று உலகெங்கும் பேசப்படும் பாடலாக அமைந்துள்ளது. இது தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். இப்பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில் ஒரு நினைவுத் தூண் உட்பட ஆறு சங்ககாலப் புலவர்களுக்கு நினைவுத் தூண்கள் நிறுவிட ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டிற்குச் சான்றாக விளங்கும் மாமல்லபுரத்தில், மேதகு சீன நாட்டு அதிபர் மற்றும் நமது பாரதப் பிரதமரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தச் சமயத்தில், மாமல்லபுரத்தில் உள்ள தமிழர் மரபை பறைசாற்றும் சிற்பங்களை நமது பாரதப் பிரதமரே சீன அதிபருக்கு விளக்கி உரைத்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட தமிழர் மரபுசார்ந்த வரவேற்பும், விருந்தோம்பலும் மற்றும் உபசரிப்பும் கண்டு வியந்து நாடு திரும்பிய சீன அதிபர் இதனை வெகுவாக பாராட்டி, நன்றி தெரிவித்து தமிழர்களின் பண்பாட்டையும், சிறப்பையும் உலகிற்கு உணர்த்தினார்.

மாமல்லபுரம் மட்டுமன்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் பல்வேறு கோயில்களிலும், குடவரைக் கோயில்களிலும் உறைந்திருக்கும் எண்ணற்ற கவின்மிகு கலைகளை காண்பதற்காகவும், பரதம், நாட்டுப்புறக் கலைகள் என பல்வேறு நிகழ்த்துக் கலைகளையும், நமது அழகிய கடற்கரையையும் காண்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக, 2014 முதல் 2017 வரையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து, அதற்கான மத்திய அரசின் விருதுகளைப் பெற்றதும், இந்தியா டுடே பத்திரிகை கணிப்பில் சுற்றுலாத் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதற்காக அளிக்கப்பட்ட விருதும் இதற்குச் சான்றாகும்.

பண்டைய ஆட்சியர்களைப் போல, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களைத் தொடர்ந்து அம்மாவின் அரசும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.தமிழ் மொழியின் மேல் தீராப்பற்று கொண்டிருந்த ஜி.யு.போப், ராபர்ட் கால்டுவெல் போன்ற தமிழ் அறிஞர்கள் பல தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்து பற்பல நூல்களை எழுதி, தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டாற்றினர். இத்தாலிய நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் தனது பெயரை தமிழில் மாற்றி வைத்துக் கொண்டு தமிழுக்கு தொண்டாற்றி மகிழ்ந்தார்.

இந்த நன்னாளில், தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

• பேரறிஞர் அண்ணா இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையிலும், புரட்சித்தலைவர் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை மதுரையிலும், எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தஞ்சாவூரிலும் சிறப்பாக நடத்தினார்கள்.

• புரட்சித்தலைவர் தமிழ் மொழியின் சிறப்பு உலகறியச் செய்ய தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவினார்கள்.
• தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தெய்வப்புலவர் திருவள்ளுவர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், தமிழ் மூதாட்டி ஒளவையார், கவிச்சக்கரவர்த்தி கம்பர், காவியக் காவலர் இளங்கோவடிகள், மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், மறைமலையடிகள், தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல், தமிழ்த் தென்றல் வி.கல்யாணசுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்படுகிறது.

• அனைத்தும் தமிழ், அறிவியலிலும் தமிழ் என்ற நோக்கோடு, பல சாதனைத் திட்டங்களை அம்மா அவர்கள் நடைமுறைப்படுத்தினார். முத்தமிழுக்கும் தன்னிகரில்லாத பங்காற்றிய தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7 விருதுகளை 56 விருதுகளாக உயர்த்தி வழங்கினார் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

• அம்மா அவர்களின் வழியில் புதிய விருதுகளாக “அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் விருது, காரைக்கால் அம்மையார் விருது, வீரமாமுனிவர் விருது, மறைமலை அடிகளார் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது போன்ற விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

• ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 10 கோடி ரூபாய் நிதி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
• வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், “யாதும் ஊரே” என்ற திட்டம் தனித் தரவு வலைதளம் உருவாக்கப்பட்டு, அது வெளிநாடுவாழ் தமிழர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
• டெல்லி தமிழ் கல்விக் கழகத்தின் மயூர்விகார் பள்ளி வளாகத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்பட்டது.

• தமிழ் அறிஞர்கள் இளவரசு, முனைவர் தமிழ்க்குடிமகன், மேலாண்மை பொன்னுசாமி, கவிஞர் நா.காமராசு, கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் மற்றும் பாபநாசம் குறள்பித்தன் போன்ற புகழ் வாய்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆற்றல்மிக்க எழுத்தாளர்களின் படைப்புகள் எளிதாக மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்தம் குடும்பங்களுக்கு பரிவுத் தொகையும் வழங்கப்படுகிறது.
• தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பது அதன் சொல் வளமே ஆகும்.

தமிழில் வழங்கும் அனைத்து சொற்களையும் திரட்டி ஒரே தளத்தில் நிரல்படுத்தி வழங்கும் சொற்குவை எனும் திட்டம் அம்மாவின் அரசால் இன்று வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் நவீன அறிவியல் காலத்தில் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் அப் என்பதற்கு “புலனம்” என்றும், வை பைவ் என்பதற்கு “பகிரலை” என்றும், பிறமொழிச் சொற்களுக்கும் சரியான தமிழ்ச் சொற்கள் தரப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பல வழிமுறைகளில் தெரிவிக்கப்படுகின்றன.
• தமிழ் மொழியில் உயர் ஆய்வினை உலகெங்கும் கொண்டு செல்ல சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை மீட்டெடுத்தவரும், தமிழர் வரலாற்றினை ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் சங்கத் தமிழ் காட்சிக் கூடத்தை நிறுவியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

• மேலும் அம்மா அவர்கள் புரட்சித்தலைவரின் கனவுத் திட்டமான உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக ரூபாய் 37 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் மதுரையில் பெருந்திட்ட வளாகமாக உலகத் தமிழ்ச் சங்கத்தை எழுப்பி வைத்தார் என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை இங்கே பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ்நாடு நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது, தமிழ் நாட்டின் பெருமை பற்றியும், நமது மொழியின் தொன்மை பற்றியும், அனைவரும் நினைவுகூறும் வகையில் அமையும் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் செயல்பாடு, தமிழ் எங்கள் உணர்வில் பூந்தென்றல் என்று தமிழ் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்ற அம்மா அவர்களின் நல்லாசியுடன் இந்த அரசு தொடர்ச்சியாக தமிழ்ப் பணி ஆற்றி வருகிறது.

“இந்த இனிய நாளில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்திட சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில் ஒரு புதிய உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூபாய் 12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதைத் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”.இதன் மூலம் தமிழர்களின் பண்டைய பண்பாடு மற்றும் தொன்மை குறித்து மக்கள் அறிந்து கொண்டு பெருமை கொள்ள அம்மாவின் வழியில் நடைபெறும் நமது அரசு வழிவகை செய்யும் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.