தற்போதைய செய்திகள்

பருவமழை பாதிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

சென்னை:-

பருவமழை பாதிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தொற்றுநோய், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பெருநகர சென்னை காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை வானிலை ஆய்வு மையம், மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பி.எஸ்.என்.எல்., தென்னக ரயில்வே, சென்னை மெட்ரோ ரயில்வே மற்றும் தொடர்புடைய துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் வடகிழக்குப் பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், முதலமைச்சரால் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய குடிமைப்பணி அளவிலான 15 கண்காணிப்பு அலுவலர்களிடம் பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டறிந்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.12.68 கோடி மதிப்பிலான தூர்வாரும் பணிகள், ரூ.17.68 கோடி மதிப்பிலான சிறு பராமரிப்பு பணிகள் குறித்தும், சென்னையில் ரூ.445 கோடி மதிப்பீட்டில் 171 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள், ரூ.1261.50 கோடி மதிப்பீட்டில் 406 கி.மீ. நீளத்திற்கு அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள்,

ரூ.1243 கோடி மதிப்பில் 360 கி.மீ. நீளத்திற்கு கோவளம் வடிநிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், ரூ.2000 கோடி மதிப்பீட்டில் 763 கி.மீ. நீளத்திற்கு கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும், பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 48 கி.மீ. நீளமுள்ள 30 பெரிய கால்வாய்களில் நவீன இயந்திரங்களைக் கொண்டு தூர்வாருதல் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றுவது குறித்தும், சிறிய கால்வாய்களில் ரொபோடிக் இயந்திரங்கள் மூலம் வண்டல் மண் அகற்றப்படுவது குறித்தும்,

அனைத்து நீர்வழிக் கால்வாய்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் பணிகள் குறித்தும் முதலமைச்சரின் அறிவுரையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் 210 நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதில் குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 90 சதவீதம் நிறைவுற்றுள்ள ரூ.445 கோடி மதிப்பீட்டில் 171 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் பணிகளை 30.11.2019க்குள் முடிக்க வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிக் கால்வாய்களில் ரொபோடிக் இயந்திரம், நவீன தூர்வாரும் இயந்திரங்களின் மூலம் 37,000 மெட்ரிக் டன் வண்டல் மண் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக அலுவலர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

மேலும் வடகிழக்கு பருவமழையின்போது, விழுந்த மரங்களை அகற்ற தேவையான சிறிய மற்றும் பெரிய அறுவை இயந்திரங்கள், நிவாரண மையங்கள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற தேவையான அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள், பொதுமக்களுக்கு உணவு வழங்க தேவையான பொது சமையலறைகள், தேவையான நோய்த்தடுப்பு மருந்துகள், அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 681 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கழிவுநீர் அகற்றும் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர், கழிவுநீர் கால்வாய்களில் தூர்வாரும் இயந்திரங்கள் ஆகியவை தயார்நிலையில் இருக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24×7 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்தும், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கும் 24 மணிநேர சிறப்பு குறை தீர்க்கும் மையத்தின் செயல்பாடு குறித்தும் அமைச்சர் கேட்டறிந்து, அம்மையங்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், தவறும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், பருவமழை காலங்களில் பொதுமக்களுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் ஏற்படாதவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள புகைப்பரப்பும் இயந்திரங்கள், கொசு ஒழிப்பு பணிக்கு போதுமான அளவிற்கு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், கொசு ஒழிப்பிற்கு தேவையான பைரித்ரம், டெமிபாஸ் மற்றும் பிளீச்சிங் பவுடர் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும், பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்களை ஆங்காங்கே நடத்திட மருத்துவ குழுக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

பின்னர், பருவமழை காலங்களில் வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் போது மீட்புப்பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 200 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு கமாண்டோ பள்ளி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த தன்னார்வலர்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் ரூ.5000 மதிப்புள்ள பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினார்.

முன்னதாக அமைச்சர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், மாநிலப் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காணொலி செயல்முறை விளக்கம் மூலம் விரிவாக விளக்கப்பட்டது.