தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டை கழகம் தான் தொடர்ந்து ஆட்சி செய்யும் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

தி.மு.க.வால் இனி ஆட்சிக்கு வர முடியாது. தமிழ்நாட்டை கழகம் தான் தொடர்ந்து ஆட்சி செய்யும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை வேப்பேரியில் உள்ள தமிழக அரசு மானியம் பெறும் செங்கல்வராயன் நாயக்கர் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர். விழாவில் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, பகுதி கழக செயலாளர்கள் த.மகிழன்பன், ரா.வீரமணி, கன்னியப்பன், குமாரி நாராயணன், எ.இளையகிருஷ்ணன், ராமஞ்சேரி நடராஜன், ரஞ்சித், வட்ட செயலாளர்கள் நவமணி, துரைராஜ், நித்தியானந்தம், கே.சிவக்குமார், எம்.பி.பரமகுரு, பி.எம்.ரமேஷ்குமார், துரைராஜ், சுப்புரு, ஆண்ட்ருஸ், பள்ளி முதல்வர் வெங்கட்ராமன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக ரூ.8000 கோடி வரை முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது முதலீடுகளின் மீது போடப்படும் ஒப்பந்தங்கள் செயல் வடிவம் பெற்று வருகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாடு பயணங்களால் தமிழகத்திற்கு ஒரு பயனும் இல்லை. ஆனால் தற்போது முதல்வர் தலைமையில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தினத்தை கொண்டாட அறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் வைத்ததே காரணம். திமுகவினர் ஒரு தடவை போட்ட மெட்டையே திருப்பி திருப்பி போட்டு கொண்டிருக்கின்றனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலின் வெற்றி ஒரு அடையாளத்தை உணர்த்துகிறது. அது என்னவென்றால் தமிழகத்தை இனிவரும் காலங்களில் திமுகவால் ஆட்சி செய்ய முடியாது. கழகம் தான்ஆட்சி செய்யும் என்பது தான். இனி எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.