தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்போம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள்…

ஈரோடு:-

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு 295 உழைக்கும் மகளிருக்கு ரூ.73,75,000 மதிப்பீட்டில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள், 9 பயனாளிகளுக்கு ரூ.55,328மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், 389 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 3 பயனாளிகளுக்கு ரூ,4,41,950 மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனத்திற்கான மானியம் என 690 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து பவானி நகராட்சி, மீன்மார்க்கெட் அருகிலும், காவல் நிலையம் அருகிலும் தலா ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 2 சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து அவர்கள் தொழில் புரிந்து தங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த பல்வேறு கடனுதவிகளை வழங்கியுள்ளார். புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய அட்டை வழங்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000-த்துடன் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.

மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் மசால்பொடி, சத்துமாவு போன்றவற்றை வீட்டிலிருந்தே தயாரித்து வருமானம் ஈட்டி வருகின்றனர். மகளிருக்கு கர்ப்ப காலத்தில் ரூ.18,000 வழங்கி அவர்களுடைய வங்கிக்கணக்கில் தொகை நேரடியாக செல்லும் வகையில் முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் 16 பொருட்கள் அடங்கிய அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கி வருகிறார். தற்பொழுது தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து அடிப்படை பரிசோதனை கருவிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். திறமை இருந்தால் மட்டும் போதும், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பெண்களுக்கென தனி காவல் நிலையம், பெண்கள் 10-ம்வகுப்பு வரை படித்திருந்தால் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 நிதியுதவியும், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்திருந்தால் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 நிதியுதவியும் வழங்கி வருகிறார்கள். பசுமை வீடு கட்டும் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி அவர்கள் கல்வி மேம்பாடு அடைய செய்தார்.

தனியார் பள்ளியை மிஞ்சுகின்ற அளவு அரசு பள்ளிகளில் சீருடை வழங்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பவானி நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, வி.எஸ்.சரவணபவா, பேரூராட்சி செயலாளர் செந்தில்குமார், கோபி வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன், கூட்டுறவு சங்க தலைவர்கள் எஸ்.எஸ்.சித்தையன், கே.கே.விஸ்வநாதன், ஏ.சி.முத்துசாமி, ஏ.ராஜேந்திரன், கராத்தே பெரியசாமி, பாவா தங்கமணி, எம்.ஜி.நாத் (எ) மாதையன், எம்.ஆர்.துரை, ஆண்டியப்பன், மைலம்பாடி கண்ணன், ஈஸ்வரமூர்த்தி, செல்லப்பன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.