ராமநாதபுரம்

நாடாளுமன்ற தேர்தலில் ஏமாற்றியது போல் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மக்களை ஏமாற்ற முடியாது – எம்.ஏ.முனியசாமி பேச்சு

ராமநாதபுரம்

நாடாளுமன்ற தேர்தலில் ஏமாற்றியது போல் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. மக்களை ஏமாற்ற முடியாது என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உள்ளாட்சித்தேர்தலில் படுதோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால் தேர்தலை நிறுத்த திமுக வழக்கு தொடுத்தது. நாடாளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றியது போல உள்ளாட்சித் தேர்தலில் ஏமாற்ற முடியாது. திமுகவும், காங்கிரசும் ஒரு திட்டத்தை எதிர்க்கிறது என்றால் நிச்சயமாக அது நல்ல திட்டமாகத்தான் இருக்கும். அரசை பாராட்ட மனமில்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு முட்டாளாக பேசி திரியும் ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.

மக்களுக்காக உழைப்பவர்களிடம் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. அரசியல் புரோக்கர்களிடம் திமுக கூட்டணி வைத்துள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா வரிசையில் தற்போது நமது புரட்சி முதல்வரும் இடம் பிடித்துள்ளார். பல அற்புத திட்டங்களை நாளுக்கு நாள் செயல்படுத்தி வருகிறார்.

மக்களுக்காக பொங்கல் பரிசு கொடுக்க முன்வந்த நேரத்திலும் அதை கொடுக்க விடாமல் வழக்கு தொடுத்தது திமுக தான். மக்களிடம் நல்ல பெயர் வந்து விடும் என்ற பயத்தினாலே தான் நாம் செய்து வரும் நல்ல திட்டங்களுக்கு குறுக்கே நிற்கிறார். உள்ளாட்சி தேர்தலில் நமது கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.