தற்போதைய செய்திகள்

அம்மாவின் கழக அரசை யாராலும் வீழ்த்த முடியாது – தமிழ்நாடுநாள் விழாவில் வைகைச்செல்வன் பேச்சு

சென்னை:-

சரித்திரத்தில் இடம் பிடித்துள்ள அம்மாவின் கழக அரசை யாராலும் வீழ்த்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் கூறினார்.

தமிழக அரசு சார்பில் நவம்பர் 1ம் தேதியன்று “தமிழ்நாடு நாள் விழாவாக” கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு நாள் விழா’ கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ‘அன்பு பதிந்த இடம், எங்கள் ஆட்சி சிறந்த இடம்’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது, இக்கருத்தரங்கத்திற்கு முன்னாள் அமைச்சரும், கழக செய்தித் தொடர்பாளருமான முனைவர் வைகைச்செல்வன் தலைமை தாங்கினார். மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர் அவ்வைஅருள் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சு.செந்தில்குமார், மதுரை கீ.பாரதீயன், பாவலர் ராமச்சந்திரன் ஆகியோர் கருத்துரையாளர்களாக பங்கேற்றனர்.

கருத்தரங்கிற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பாளருமான முனைவர் வைகைச்செல்வன் பேசியதாவது:- 

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியம் கூறியுள்ள போதிலும், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆண்ட பூமியாகும். அன்னியப் படையெடுப்புகளால் இந்த நிலப்பரப்பு கூறு போடப்பட்டு, சிலகாலங்கள் சிலரால் ஆளப்பட்ட போதிலும் கூட, வேற்று மொழியினரான தெலுங்கர்கள், மராட்டியர்கள், சவுராஷ்டிரத்தினர் என பலர் வந்து குடியேறி ஆட்சி அதிகாரம் செய்த காலத்திலும் கூட, இந்த மண்ணில் வாழும் பூர்வகுடிகள் தமிழ்நாடு என்ற உணர்வை ஒரு போதும் இழக்கவில்லை.

நாடு சுதந்திரம் பெற்று 8 ஆண்டுகள் வரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சியாகத்தான் செயல்பட்டு வந்தது. 1952 அக்., 14-ந்தேதி பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் “மதராஸ் மனதே என்ற கோஷத்துடன், மதராசைத் தலைமையிடமாக கொண்டு, ஆந்திரப்பிரிவினையைக் கோரி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். ஆந்திரத்தலைவர்கள் பிரகாசம், சாம்பமூர்த்தி ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.; உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவை, ம.பொ.சிவஞானம் சந்தித்தார். அப்போது பிரகாசம் ம.பொ.சி.,யிடம் “ராமுலுவின் உயிரைக்காக்க உதவுங்கள் என கோரிக்கை விடுத்தார். ஆனால் மெட்ராசை விட்டு விட்டு ஆந்திராவை மட்டும் பிரிக்கக் கோரினால் தாமும் தமிழரசு கழகமும் உதவுவதாக மா.பொ.சி., உறுதியாக தெரிவித்து விட்டார்.

“ஆந்திர அரசு தற்காலிகமாக சென்னையில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும், விசால ஆந்திரம் அமையும் போது, ஹைதராபாத் கிடைத்து விட்டால் அங்கு போய்விடுவோம். நீங்கள் சம்மதித்தால் மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்று அவர்கள் தந்திரமாகக் கேட்ட போதும், ம.பொ.சி., தன் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை. 1952, டிசம்பர் 15-ல் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தின் போதே உயிர் துறந்தார். ஆந்திராவில் கலவரம் வெடித்து, மூன்று நாட்கள் நீடித்தது. இதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வெளியிட்ட அறிக்கையில், “சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமல்லாத, தெலுங்கு வழங்கும் மாவட்டங்களை கொண்டு சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும். தலைநகர் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.

பின்னர் தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956-ம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். ஜீவானந்தம் போன்ற பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள், பேரறிஞர் அண்ணா, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. உள்ளிட்டோர் சங்கரலிங்கனாரின் உயர்ந்த நோக்கத்தை ஆதரித்த அதே வேளையில், சாகும்வரை உண்ணாவிரதம் என்பதை கைவிட வலியுறுத்தினர். எனினும், தனது கொள்கையில் உறுதியாக இருந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 31-ல் உயிர் நீத்தார்.

1956-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்கு பின் இன்றைய மெட்ராஸ் ஸ்டேட் உருவானது. தொடக்கத்தில் மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன.

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வெளியிட்ட அறிக்கைக்கு, அப்போதைய சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மேனாக இருந்த ம.பொ.சி., இதற்கு சம்மதிக்காததோடு, கடும் எதிர்ப்பையும் தெரிவித்தார். “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் துவக்கினார். அப்போதைய மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், முதல்வர் ராஜாஜியின் ஆதரவுடனும் திருவல்லிக்கேணி கடற்கரையில், எஸ்.எஸ்.,கரையாளர், பக்தவத்சலம், ராஜாஜி, ஈ.வே.ரா. போன்ற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார்.

1967-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் 18.07.1968 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்ற அரசியல் தீர்மானத்தை அறிஞர் அண்ணா முன் மொழிந்து பேசினார்.

‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அறிஞர் அண்ணா, சட்டமன்றத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதல் பெற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் குரலைத் தொடர்ந்து “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என மும்முறை முழங்கினர். அறிஞர் அண்ணா “இத்தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது தமிழர்க்கு – தமிழர் வரலாற்றுக்கு – தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது” என்று கூறினார்.

1968-ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் உருவாவதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டமும், சில உயிரிழப்புகளும், தியாகங்களும் தேவைப்பட்டன என்பதே வரலாறு நமக்கு சொல்லும் உண்மையாகும்.
அன்பு பதிந்த இடம் — எங்கள் ஆட்சி சிறந்த இடம் — நல் இன்பம் நிறைந்த இடம் — எமைஎல்லாம் ஈன்ற திராவிடமே!- என்கிற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா என்கிற இரு பெரும் ஆளுமைகளின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே பொருத்தமாகத் திகழ்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றதொரு மாபெரும் மக்கள் இயக்கத்தை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தோற்றுவிக்காமல் போயிருந்தால், திராவிட இயக்கம் மக்கள் செல்வாக்கை அடியோடு இழந்திருக்கும், அழிந்திருக்கும். அத்தகைய அழிவைத் தடுத்து நிறுத்தி, திராவிட இயக்கத்தைக் காப்பாற்றிய பெருமை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையே சாரும். புரட்சித்தலைவரின் மறைவிற்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் ஆட்சிக்கு மீண்டும் புத்துயிர் அளித்தவர்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா என்கிற இருபெரும் ஆளுமைகளின் மறைவிற்குப் பிறகு, தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் என்பது நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தடுக்கி விழுந்தால் கட்சிகள் ஆரம்பிக்கும் காலமாக மாறிவிட்டாலும், ஆலமர விழுதுகள் போல் கிளைபரப்பிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும், யாராலும் வீழ்த்த முடியாத ஒரு சுயம்புவாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.