தேனி

மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..

தேனி

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து முதலமைச்சர் உத்தரவின்படி, முதல்போக சாகுபடிக்காக நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 60 கன அடி தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர் என மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 02.11.2019 முதல் 15.12.2019 வரை வினாடிக்கு 60 கனஅடி வீதம் 44 நாட்களுக்கும், 16.12.2019 முதல் 31.01.2020 வரை வினாடிக்கு 50 கனஅடி வீதம் 47 நாட்களுக்கும், 01.02.2020 முதல் 15.03.2020 வரை வினாடிக்கு 45 கனஅடி வீதம் 44 நாட்களுக்கும் மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 02.11.2019 முதல் 30.11.2019 வரை வினாடிக்கு 40 கனஅடி வீதம் 29 நாட்களுக்கும், 01.12.2019 முதல் 29.02.2020 வரை வினாடிக்கு 30 கனஅடி வீதம் 91 நாட்களுக்கும், 01.03.2020 முதல் 15.03.2020 வரை வினாடிக்கு 20 கனஅடி வீதம் 15 நாட்களுக்கும் என மொத்தம் பாசனத்திற்காக 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன்மூலம் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்ப்பட்ட தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய கிராமங்களும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணவாய்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவராயன்கோட்டை, சிவஞானபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு 3386 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு 1873 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் வருவாய் கோட்ட சார் ஆட்சியர் ச.சிநேகா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், பெரியகுளம் வட்டாட்சியர் ரத்தினமாலா மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.