தற்போதைய செய்திகள்

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைக்கிறார்

சென்னை

முதலமைச்சரின் உத்தரவுபடி நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இதன் தொடக்கமாக 04.11.2019 அன்று காலை 10 மணியளவில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறுகிறது.

முதன்மை செயலாளரும், வருவாய் நிருவாக ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் முன்னிலை வகிக்கிறார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து 05.11.2019 அன்று திருச்சியிலும், 06.11.2019 அன்று சென்னையிலும் மற்றும் 07.11.2019 அன்று திருவள்ளூரிலும் நடத்தப்படுகிறது.

இம்முகாமில் குளம், குட்டை, ஆழ்துளை கிணறு, பாதாள சாக்கடை, கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் வெள்ளம், புயல் (அ) சூறாவளி, தீவிபத்து, நிலநடுக்கம், மின்னல் போன்ற பேரிடர்களிலிருந்து தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு குறித்த முகாம் நடைபெறுகிறது.

இந்த ஒத்திகை நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், கலந்து கொள்கின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, தன்னார்வல தொண்டு நிறுவனங்கள், 108 ஆம்புலன்ஸ், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நேரு யுவகேந்திரா போன்ற துறைகள் தங்கள் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.