தற்போதைய செய்திகள்

அம்மா இரு சக்கர வாகன திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 2970 பேர் பயன் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

அம்மா இரு சக்கர வாகன திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 2970 பேர் பயன்பெற்றுள்ளதாக அமைச்சரர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 715 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 75 ஆயிரம் மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனங்களையும், 6 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.33 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிக்கான ஆணைகளையும் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தீட்டி டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.பெண்கள் தங்கள் சொந்த காலிலே நிற்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கில் பெண்கள் நலன்காக்கும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது அம்மா அவர்களின் அரசு. அந்த வகையில் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்தை அம்மா அவர்கள் அறிவித்து செயல்படுத்தினார். தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்ததை 8 கிராமாக உயர்த்தி உத்தரவிட்டு செயல்படுத்தியவர் அம்மா அவர்கள்.

தொலைநோக்கு பார்வை கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து இந்திய திருநாட்டிலேயே மகளிர் பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கு எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தினை அறிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் பாரத பிரதமரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினகீழ் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2970 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை உழைக்கும் மகளிர்கள் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்
இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரீதா, குடவாசல் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பாப்பா சுப்ரமணியன், கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.டி.மூர்த்தி, மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.