தற்போதைய செய்திகள்

நீதித்துறை சிறப்பாக செயல்பட தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உறுதி…

திருவண்ணாமலை:-

நீதித்துறை சிறப்பாக செயல்பட தேவையான வசதிகளை அம்மாவின் அரசு செய்து கொடுக்கும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். எஸ். இராமச்சந்திரன் முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. கிருஷ்ணகுமார் குத்துவிளக்கேற்றி நீதிமன்றங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சி. திருமகள், தலைமை குற்றவியல் நீதிபதி ஆர்.சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம் (கலப்பாக்கம்),

தூசி கே.மோகன் (செய்யாறு), நீதிபதிகள், திருவண்ணாமலை மற்றும் போளுர் பார் அசோசியேஷன் தலைவர்கள், திருவண்ணாமலை வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் நீதித்துறையின் வளர்ச்சியும் அவற்றிற்கான அடிப்படை வளர்ச்சிகளையும் பல்வேறு வகையில் மேம்பாடு செய்து வருகிறார்கள். அனைத்து மக்களுக்கும் நடுநிலையான நீதி வழங்குவது என்பது ஒரு நாட்டின் தலையாய கடமைகளுள் ஒன்றாக தொன்றுதொட்டே கருதப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி குடிமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது ஓர் அரசாங்கத்தின் கடமையாகும். இதனை அம்மாஅரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. தமிழகத்தில் நீதித்துறையின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டு தகுந்த சூழ்நிலை அமைவதற்கு அம்மாவின் அரசு மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. சிறந்த சேவையினை வழக்காடும் மக்களுக்கு வழங்கும் பொருட்டு நீதித்துறை அமைப்பிற்கு தேவையான கட்டடங்கள், வசதிகள், மனித சக்தி மற்றும் பிற அடிப்படை வசதிகள் அம்மாவின் அரசு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் மாநகர உரிமையியல் நீதிமன்றங்கள், சிறு வழக்குகள் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றங்கள், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், தொழிலாளர் நல நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றகள் மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள், உட்பட மொத்தம் 1149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

முதலமைச்சரின் உத்தரவின்படி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் 2019-2020ம் ஆண்டிற்கான நீதி நிருவாகம் மானியக் கோரிக்கையின் போது திருவண்ணாமலையில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்ட நீதிமன்றம் திறக்கப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலையில் குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணியில் பதினான்காவது நிதிக்குழு பரிந்துரைப்படி மாநில அரசின் நிதியிலிருந்து ரூ.58.64 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்) அமைப்பதற்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களாட்சியில் சட்டத்தின் மாட்சியே மேலானது என்பதாலும், சட்டம் மனித சமுதாயத்தின் மாண்பை பேணிக் காப்பதாலும், மக்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியதாக சட்டங்கள் விளங்குவதாலும் அம்மாவின் அரசு சட்டத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

சட்டம் சமுதாயத்தின் உறுதியான நிலைப்பாட்டைப் பேணி வருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சட்டம் என்னும் கருவியினால் மட்டுமே பொதுஒழுங்கு பேணி வரப்படுகிறது, சமுதாயத்தின் வளர்ச்சியும், மேம்பாடும் முரண்பாடு எதுவும் இல்லாமல் உறுதி செய்யப்படுகிறது மற்றும் குடிமக்களின் உரிமைகள் பேணப்பட்டு வருகின்றன. அம்மாவின் அரசு நீதித்துறை செவ்வனே செயல்படத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், நீதிபதிகளுக்கு குடியிருப்புகள் என அனைத்து வசதிகளையும் தொடர்ந்து செயல்படுத்தும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.