திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.30 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி மும்முரம் – தலைமை செயலாளர் க.சண்முகம் நேரில் ஆய்வு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை பகுதியில் ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்டுவரும் நீர்தேக்கத்தின் பணிகளை அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளையும் இணைத்து புதிய நீர்த்தேக்கமாக உருவாக்கி, அதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீரையும், பருவ காலங்களில் பொழியும் மழைநீரையும், 500 மில்லியன் கனஅடி அளவிற்கு இரண்டு முறையில் 1000 மில்லியன் கன அடி நிரப்ப திட்டமிடப்பட்டு சென்னை மாநகர குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்கும் ரூ.330 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்திற்கு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 11.09.2013 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. திருத்திய திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.380 கோடி ஆகும். இந்த பணிகளை தலைமை செயலாளர் க.சண்முகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் உத்தரவுப்படி, கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை பகுதியில் ரூ.330 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் நீர்தேக்கப் பணிகளை விரைந்து முடிக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நில ஒதுக்கீடு பணிகளுக்காக திட்ட மறு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.380 கோடிக்கு பணிகள் நடைபெறுகிறது.

முதலமைச்சர் இவையனைத்து பணிகளையும் துரிதமாக முடிப்பதற்கு ஆணையிட்டதின் பேரில், அனைத்து அலுவலர்களுக்கும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்கப்பணிகள் முடிந்தவுடன் சென்னைக்கு கூடுதலாக ஒரு டி.எம்.சி. அளவிற்கு நீர் ஆதாரம் கிடைக்கும். இந்நீர் தேக்கத்தில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவற்றின் வாயிலாக நீர் ஆதாரம் கிடைக்கப்பெறும். எனவே, அரசிற்கு இந்நீர்தேக்கம் மிகவும் முக்கியமான திட்டமாக உள்ளது.

நில எடுப்பு மற்றும் கனமழை ஆகிய காரணங்களால் தடைப்படாமல் இருக்க அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தாரர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை 80 சதவிகிதம் பணிகளானது நிறைவடைந்துள்ளது. இந்த அனைத்து பணிகளும் 2020 மார்ச்க்குள் நிறைவடையும். இவ்வனைத்து பணிகளும் விரைவாகவும், தரமாகவும் முடிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு நீர்தேக்கம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு தலைமை செயலாளர் க.சண்முகம் கூறினார்.

இவ்வாய்வின்போது பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர்கள் கே.ராமமூர்த்தி, கே.அசோகன், பாலாறு வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, கொசஸ்தலையாறு செயற்பொறியாளர் பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.