தற்போதைய செய்திகள்

கணபதிபாளையத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.37.72 லட்சம் மதிப்பில் பொது வசதி மைய கட்டடம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

திருப்பூர்

கணபதிபாளையத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.37.72 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பொது வசதி மைய கட்டடத்தை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கணபதிபாளையம் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் ரூ.37.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுவசதி மைய கட்டட திறப்பு விழா நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் நலத்திட்டங்களை தமிழக மக்கள் பெறும் வகையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி வளர்ச்சி ஆணையர் புதுடெல்லி மற்றும் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணைந்து கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கைத்தறி குழும திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

மேலும், கைத்தறி குழுமத்திலுள்ள நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் பல்லடம் வட்டார கைத்தறி குழுமத்திற்காக கணபதி பாளையத்தில் ரூ.37.72 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 2930 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்ட பொது வசதி மைய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் நிர்வாக அலுவலகம், வரவேற்பறை, நூல் இருப்பறை, முடிவடைந்த சரக்கு இருப்பறை , பயிற்சி மையம், பாவு தயாரிக்கும் பிரிவு மற்றும் இ-சேவை மையம் ஆகிய அறைகளுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தினை நெசவாளர் பெருங்குடி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் உதவி திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு தலா ரூ.50,000 மதிப்பில் கடனுதவியும் மற்றும் 10 நபர்களுக்கு தலா ரூ.15,000 மதிப்பிலான ஜக்கார்டு பெட்டிகளையும் அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து, தாராபுரம் சாலை கோவில்வழி, பொன்முத்து நகர் பகுதியில் திருப்பூர் வட்டார கைத்தறி குழுமத்தைச் சார்ந்த நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், கோவில்வழி பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் ரூ.37.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுவசதி மைய கட்டிடத்தினையும் அமைச்சர் திரு.உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் உதவி திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு தலா ரூ.50,000 திப்பில் கடனுதவியும் மற்றும் 10 நபர்களுக்கு தலா ரூ.15,000 மதிப்பிலான ஜக்கார்டு பெட்டிகளையும் வழங்கினார்.