சிறப்பு செய்திகள்

பெருங்களத்தூரில் ரூ.207 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 1.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்களத்தூரில் 206 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கிடையே கட்டப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கிடையே பெருங்களத்தூரில் ரயில்வே கடவு எண் 32-க்கு மாற்றாக 206 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், தலைமைப் பொறியாளர் (பெருநகரம்) ச.சுமதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.