சிறப்பு செய்திகள்

858 பேருக்கு ரூ.16.17 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை

கோவை கரடிமடையில் 858 பேருக்கு ரூ.16.17 கோடிமதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை மாவட்டம், தென்கரை பேரூராட்சி, கரடிமடை ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி மற்றும் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில்  முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து 1350 மனுக்களை பெற்றார்். பின்னர் 858 பயனாளிகளுக்கு ரூ.16.17 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

முதலமைச்சரால், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மென்மேலும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், அனைத்துத்துறை உயர் அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நடத்தப்படுகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி குறைதீர்க்கும் நிகழ்வுகளில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் 110 விதி கீழ் 18.07.2019 அன்று அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் இன்று தென்கரை பேரூராட்சி, கரடிமடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இங்கு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்பட்டு, அம்மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். பல்வேறு நலத் திட்டப் பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின் போது தீர்வு காணப்படும். மேலும், இத்திட்டம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான சிறப்புத் திட்டமாக திகழும்.

இந்த சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில், 858 பயனாளிகளுக்கு ரூ.16.17 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.192 கோடி மதிப்பீட்டில் காந்திபுரம் முதலடுக்கு உயர்மட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டதுடன், இரண்டாம் கட்ட மேம்பாலப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. பொள்ளாச்சி முதல் ஈச்சனாரி வரை ரூ.414.90 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி, ரூ.215.51 கோடி மதிப்பில் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.130.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தொண்டாமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் (விமான நிலையம்) வரை ரூ.1000 கோடி மதிப்பில் பாலம் அமைக்க ரூ.3.40கோடி மதிப்பில் முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் சாலைவசதிகளை மேம்படுத்தும் வகையில் 10 பாலங்கள் ரூ.135.65 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.20.34 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கட்டிடம், ரூ.4.45கோடி மதிப்பில் மதுக்கரை மற்றும் பேரூர் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படப்பட்டுள்ளன. இது போல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

அதனை தொடர்ந்து தென்கரை பேரூராட்சி, மத்தியபாளையத்திலுள்ள மாவட்ட பொது நல முதியோர் இல்லத்தில் ரூ.12.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுச்சுவர் கட்டிடத்தினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.