சிறப்பு செய்திகள்

தமிழக வேளாண்மைத்துறைக்கு 5 மத்திய அரசு விருதுகள் – முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரா.துரைக்கண்ணு

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை 1.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத்துறை அமைச்சர்
இரா.துரைக்கண்ணு சந்தித்து, புதுடெல்லியில் 25.9.2019 அன்று நடைபெற்ற ஸ்காச் விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட நீடித்த நிலையான மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூட்டுப்பண்ணையத் திட்டம், நுண்ணீர்ப்பாசன மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் நுண்ணீர்ப்பாசன திட்டத்தினை செயல்படுத்துதல், தோட்டங்கள் மற்றும் பூங்காக்களை சிறந்த முறையில் பராமரித்தல் மற்றும் இ-தோட்டம் ஆகிய ஐந்து திட்டங்களுக்கு ஸ்காச் நிறுவனத்தால் பாராட்டுதலாக வழங்கப்பட்ட ஸ்காச் நற்சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விவசாய பெருமக்களின் வருமானம் உயர்வதற்கு சீரிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

* வேளாண்மைத் துறையில் நீடித்த நிலையான மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின் மூலம் 25 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள், 2,500 ஏக்கர் அளவிலான 1000 தொகுப்புகளாக்கி அவற்றில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களின் உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை பல்வேறு உத்திகளின் வாயிலாக மேம்படுத்தி சுமார் 10 லட்சம் மானாவாரி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு வகைகளில் செயலாற்றி வருகிறது.

* சிறுகுறு விவசாயிகளை உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக ஒன்றிணைக்கும் கூட்டுப்பண்ணைய முறையினை ஊக்கப்படுத்தி, கூட்டாக சாகுபடி செய்தல், இடுபொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்தல், விளைபொருட்களை ஒருங்கிணைத்து, இலாபகரமான விலையில் விற்பனை செய்தல் மூலம் 4 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு அரசு, நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தினை சிறு குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்துடனும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்துடனும் செயல்படுத்தி வருகிறது. நுண்ணீர் பாசனத் திட்டத்தினை, வெளிப்படைத் தன்மையுடன் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, 2017-18-ம் ஆண்டு முதல் என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, நுண்ணீர்ப் பாசனத்திட்ட மானியமாக 2018-19-ம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு சாதனை அளவாக 735 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது நாட்டிலேயே, நுண்ணீர்ப்பாசனத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட மிக அதிகபட்ச மானியத் தொகையாகும். நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு மூலம், விவசாயிகள் பதிவு செய்வதிலிருந்து, மானியம் விடுவிக்கும் வரை உள்ள பல்வேறு பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் – அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்கா சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்காக்களை அழகுபடுத்தும் திட்டத்தில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்ணாடி இல்லமும் ஒன்றாகும்.

* விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் விளையும் தோட்டக்கலை விளைபொருட்கள் மற்றும் தோட்டக்கலை நடவு பொருட்களை நுகர்வோர், வணிகர்கள் மற்றும் இதர விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட “இ-தோட்டம்” என்ற இணைய தளத்தின் மூலம் விவசாயிகள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதற்கான இணைய சந்தை தொடங்கியுள்ளது.

மேற்காணும் ஐந்து திட்டங்களை சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தியதற்காக 5 ஸ்காச் நற்சான்றிதழ்கள், ஸ்காட்ச் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது, வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மைத் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.