தற்போதைய செய்திகள்

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிடம் பரிசுபொருள் வாங்கிய தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிடம் பரிசுபொருள் வாங்கிய தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள புளியம்பட்டி, கொல்லவீரன்பட்டி, வெங்கடாசலபுரம், நல்லமரம், பாப்பநாயக்கன்பட்டி, சுப்புலாபுரம், சந்தையூர், தொட்டியபட்டி கிளாக்குளம், டி.குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆசியுடன் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் உங்கள் பகுதிக்கு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி தருவார்கள்.ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று முதன்முதலில் புரட்சித்தலைவி அம்மா மத்திய அரசிடம் கூறிய போது அப்போதிருந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏளனம் செய்தன. ஆனால் இன்றைக்கு தமிழ் இனத்தின் உரிமை காப்பதில் அம்மாவின் வழியில் நாங்கள் செயல்படுகிறோம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எங்களின் தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை பரிவுடன் கேட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் இக்கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் சரியான நேரத்தில் உரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சரிடம் உறுதி அளித்துள்ளார்.

மத்திய அரசில் திமுக 14 வருடம் அங்கம் வகித்தபோது இதுபோன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்தது உண்டா? ஒன்று மட்டும் செய்தார்கள். நமது தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே கையில் திமுகவை சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுவினர் பரிசுப்பொருள் வாங்கினார்கள். இதன் மூலம் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தார்கள் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று பாரத பிரதமரும், உள்துறை அமைச்சரும், நமது முதலமைச்சரும் உறுதி கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது கல்வியாளர்களும், வழக்கறிஞர்களும், ஊடகங்களில் பேசும்போது குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது, குறிப்பாக முஸ்லிம் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தெள்ளத் தெளிவாக கூறி இருக்கிறார்கள்.

ஆனால் உண்மையை மறைக்க எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திசை திருப்பி வருகின்றனர். மேலும் அரசு தரும் விளக்கங்களை ஏற்காமல் தேவையில்லாத குழப்பத்தை மக்களிடம் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன. இது போன்ற தீய சக்திகளுக்கு மக்களாகிய நீங்கள் சரியான பாடம் புகட்டும் நேரம் தான் இது.

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தை திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசினை முதலமைச்சர் அறிவித்து அதனை தன் திருக்கரத்தால் தொடங்கி வைத்தார். ஆனால் அதை வழங்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கியுள்ளன. மக்களுக்காக திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தால் அதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடை செய்ய நினைக்கிறது. எத்தனை தடை போட்டாலும் அந்த தடைகளை தகர்த்தெறிந்து நாங்கள் நிச்சயம் மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கியே தீருவோம்.

தற்போது உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திராணி இல்லாத ஸ்டாலின் குடியுரிமை திருத்த மசோதா சட்டம் என்ற பெயரில் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதையெல்லாம் மக்களாகிய நீங்கள் அறிந்து கொண்டு சரியான பாடத்தை திமுகவுக்கு புகட்டுங்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

பிரசாரத்தின்போது கழக அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கம், தேமுதிகவை சேர்ந்த கணபதி, மாவட்ட இலக்கிய அணி திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, முன்னாள் துணை சேர்மன் பாவடியான் உள்பட பலர் உடன் சென்றனர்.