தற்போதைய செய்திகள்

அரசின் சாதனை திட்டங்களால் உயர் கல்வி சதவீதம் அதிகரிப்பு – அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

தருமபுரி

அரசின் சாதனை திட்டங்களால் உயர் கல்வி சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர், பைசுஹள்ளி மற்றும் பாலக்கோடு ஆகிய அரசு பல வகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் 442 மாணவ, மாணவிகளுக்கு ரூ.54.25 லட்சம் மதிப்பில் விலையில்லா மடிகணினிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

இவ்விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள், முழுமையாக பள்ளி கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள், விலையில்லா மடிகணினிகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்க பள்ளி கல்வித்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.28,757 கோடியே 62 லட்சம் ஒதுக்கியுள்ளது.

மேலும் உயர்கல்வித்துறைக்கு நடப்பு நிதி ஆண்டிற்கு ரூ.4,584 கோடியே 21 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி பயில்வோர் 25.8 சதவீதம் பேர் உள்ளனர். தமிழகத்தில் இந்த சதவீதம் 49 சதவீதமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத சிறப்பு திட்டங்களை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வருவதால் இந்த சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு உயர்கல்வி பெறுவோரின் சதவீதம் 98.41 சதவீதமாக உள்ளது. மேலும் அரசு பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என அனைத்து கல்லூரியும் உருவாக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் 141 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17.30 லட்சம் மதிப்பில் விலையில்லா மடிகணினியும், பைசுஹள்ளி பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.14.73 லட்சம் மதிப்பில் 120 விலையில்லா மடிகணினியும், பாலக்கோடு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் 181 மாணவ, மாணவிகளுக்கு ரூ.22.21 லட்சம் மதிப்பில் விலையில்லா மடிகணினி என மொத்தம் ரூ. 54.25 லட்சம் மதிப்பில் 442 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாலக்கோடு பலவகை தொழில்நுட்ப கல்லூரிக்கு ரூ. 16.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோகனூர் மற்றும் சேலம் பலவகை தொழில்நுட்ப கல்லூரிக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் உயர்க்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழக அரசு வழங்கும் திட்டங்களை மாணவ, மாணவிகள் முழுமையாக பயன்படுத்தி எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.