தற்போதைய செய்திகள்

கரூர் நகராட்சியில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

கரூர்

கரூர் நகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் அட்ரியன் பள்ளியில் இருந்து கரூர் நகராட்சி கழிவுநீர் வடிகால் வரை ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கென்று கேட்ட அனைத்து திட்டங்களையும் அம்மா அவர்களை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் தொடர்ந்து வழங்கி வருகிறார். கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் மற்றும் பெரியகுளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் குகைவழிப்பாதை ரூ.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்க தமிழக அரசிடமிருந்து சிறப்பு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு நகராட்சிக்கு சாலை போடுவது உள்ளிட்ட பணிகளுக்காக ஆண்டிற்கு 4 முதல் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். ஆனால், இனாம்கரூர், கரூர் மற்றும் தாந்தோணி ஆகிய பகுதிகள் அடங்கிய பெருநகராட்சியாக விளங்கும் நமது கரூர் நகராட்சிக்கு ரூ.15 கோடி நிதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு நகரப்பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் ரூ.20 கோடி அளவிலான நிதி பெற்றுத்தர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல கரூர் நகராட்சியில் கச்சேரிபிள்ளையார் கோவில் தெரு, கேவிபி நகர் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட 46,000 குடிநீர் இணைப்புகளுக்கும் சீரான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ரூ.15 கோடி நிதியுதவி வழங்கி அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்திட்டங்கள் முழுமையாக நிறைவுபெற்ற பின்னர் தினந்தோறும் மக்களுக்கு சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

சுமார் ரூ.490 கோடி மதிப்பீட்டில் நஞ்சை புகளுர் பகுதியில் 1 டி.எம்.சி நீரை தேக்கும் கதவணை. குளித்தலை, நெரூர் உள்ளிட்ட பகுதிகளில் கதவணை அமைக்க ஆய்வு பணிக்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் சில இடங்களில் கதவணை அமைக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே, மாயனூரில் 1 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையிலான கதவணை இருக்கிறது. மேற்சொன்ன கதவணைகளும் வரும் பட்சத்தில், கரூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையே இருக்காது

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் மார்க்கண்டேயன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் செல்வராஜ், கமலக்கண்ணன், என்.எஸ்.கிருஷ்ணன், சு.மல்லிகா, ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.