தற்போதைய செய்திகள்

மழைநீர் சேகரிப்பு திட்ட செயல்பாட்டில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று நீர் மேலாண்மை கருத்தரங்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கோவைப்புதூர் சி.பி.எம். கல்லூரியுடன் இணைந்து, வளர்ந்து வரும் நகரங்களில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து பேசியதாவது:-

நீர் ஆதாரங்களை புனரமைத்து, புத்துயிர் அளிப்பதோடு, நிலத்தடி நீர்த்தேக்கங்களை மேம்படுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களால் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் கோயில் குளங்களை புனரமைக்க, நீடித்த நீர் பாதுகாப்பு திட்டத்தினை புரட்சித் தலைவி அம்மா 2015- ல் அறிவித்தார்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் அம்ரூத் திட்டங்கள் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர் ஆதாரங்களை பராமரித்துப் பாதுகாக்கவும், பொதுமக்கள் பங்கேற்புடன் பாரம்பரியமான ‘குடிமராமத்து’ முறைக்கு புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் கழக அரசு புத்துயிர் அளித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் இந்த குடிமராமத்து திட்டத்திற்கு விவசாய பெருமக்களுக்கிடையே பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 43,205 நீர்நிலைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தூர் வாரப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பல்வேறு அரசு அலுவலக வளாகங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்,

பூங்காக்களில் மழைநீரை சேகரித்து, அதை அந்த பூங்காக்களிலேயே பயன்படுத்துதல் மற்றும் கோவில் குளங்களை புனரமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,525 ஊராட்சிகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 37,826 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் அம்ரூத் திட்டத்தின் கீழ், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 18 பெரிய குடிநீர் திட்டப் பணிகள் ரூ.6,496 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.